கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் புதியபாரதி விளையாட்டுக்கழகத்தின் இரு வீரர்கள் தேசியமட்ட கடற்கரை கரப்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதி பெற்றிருந்த போதும், நிதியின்மை காரணமாக அவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு நேற்றையதினம்(04) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையே நடைபெற்ற, இருவர் பங்குபெறும் கரப்பந்துப் போட்டியில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இயங்கும் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஜெயப்பெருமாள்; மோகனரூபன், நாகராசா நிசாந்தன் ஆகிய இரு வீரர்களும் பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண நிலைகளில் வெற்றியீட்டி 2024.05.31 – 2024.06.02 வரையான மூன்று நாட்கள் நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்த போதும், 'நிதியின்மை' காரணமாக அவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை என்ற விடயம், கிளிநொச்சி மாவட்ட மக்களிடையே மிகக்கூடிய விசனத்தை ஏற்படுத்தியுள்ள சமநேரத்தில் அந்த மக்களின் பிரதிநிதியாக என்னையும் பாதிக்கின்ற சம்பவமாகவே நான் இதனைக் கருதுகிறேன்.
தேசிய மட்ட மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தும், நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த, பலநிலைப்பட்ட மாணவர்கள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கு நன்கொடையாளர்கள், நிதியங்கள் என்பவற்றின் அனுசரணையோடும் தனிப்படவும் என்னால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடே இவ்விடயம் குறித்து அறிய முடிந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருந்தது.
அதேவேளை இவ்விடயம் அறிந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் என்னைத் தொடர்பு கொண்டு வினவியதோடு தனது கவலையைப் பதிவு செய்திருந்ததையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்நிலையில், தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக குறித்த வீரர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு மாகாண நிருவாகத்திற்கு உட்பட்டது என தெரிவிக்கப்படும் நிலையில், இடர்கள் மிகுந்தும் வளங்களும் வாய்ப்புகளும் குறைந்தும் இருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரக் கிராமத்திலிருந்து தமது திறமையால் தேசிய அங்கீகாரத்திற்குத் தகுதிபெற்ற வீரர்களது வாய்ப்பு, நிருவாக நடைமுறைகளின் சீரின்மையால் பறிக்கப்பட்டிருப்பது மனவருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரிய விடயம் என்பதுடன் அதுசார்ந்து குறித்த வீரர்கள் அதியுச்ச உளத்தாக்கங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இதுவிடயமாக தாங்கள் உயரிய கரிசனைகொண்டு, குறித்த வீரர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்குரிய காரணத்தை வெளிப்படுத்துவதற்கும், அதற்கு மாகாண நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனில் உரிய அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கும் ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியின்மையால் தேசிய மட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட கிளிநொச்சி வீரர்கள். பிரதம செயலாளருக்கு சிறிதரன் எம்.பி கடிதம். கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் புதியபாரதி விளையாட்டுக்கழகத்தின் இரு வீரர்கள் தேசியமட்ட கடற்கரை கரப்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதி பெற்றிருந்த போதும், நிதியின்மை காரணமாக அவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு நேற்றையதினம்(04) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையே நடைபெற்ற, இருவர் பங்குபெறும் கரப்பந்துப் போட்டியில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இயங்கும் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஜெயப்பெருமாள்; மோகனரூபன், நாகராசா நிசாந்தன் ஆகிய இரு வீரர்களும் பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண நிலைகளில் வெற்றியீட்டி 2024.05.31 – 2024.06.02 வரையான மூன்று நாட்கள் நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்த போதும், 'நிதியின்மை' காரணமாக அவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை என்ற விடயம், கிளிநொச்சி மாவட்ட மக்களிடையே மிகக்கூடிய விசனத்தை ஏற்படுத்தியுள்ள சமநேரத்தில் அந்த மக்களின் பிரதிநிதியாக என்னையும் பாதிக்கின்ற சம்பவமாகவே நான் இதனைக் கருதுகிறேன். தேசிய மட்ட மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தும், நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த, பலநிலைப்பட்ட மாணவர்கள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கு நன்கொடையாளர்கள், நிதியங்கள் என்பவற்றின் அனுசரணையோடும் தனிப்படவும் என்னால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடே இவ்விடயம் குறித்து அறிய முடிந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருந்தது. அதேவேளை இவ்விடயம் அறிந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் என்னைத் தொடர்பு கொண்டு வினவியதோடு தனது கவலையைப் பதிவு செய்திருந்ததையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்நிலையில், தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக குறித்த வீரர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு மாகாண நிருவாகத்திற்கு உட்பட்டது என தெரிவிக்கப்படும் நிலையில், இடர்கள் மிகுந்தும் வளங்களும் வாய்ப்புகளும் குறைந்தும் இருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரக் கிராமத்திலிருந்து தமது திறமையால் தேசிய அங்கீகாரத்திற்குத் தகுதிபெற்ற வீரர்களது வாய்ப்பு, நிருவாக நடைமுறைகளின் சீரின்மையால் பறிக்கப்பட்டிருப்பது மனவருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரிய விடயம் என்பதுடன் அதுசார்ந்து குறித்த வீரர்கள் அதியுச்ச உளத்தாக்கங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். இதுவிடயமாக தாங்கள் உயரிய கரிசனைகொண்டு, குறித்த வீரர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்குரிய காரணத்தை வெளிப்படுத்துவதற்கும், அதற்கு மாகாண நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனில் உரிய அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கும் ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.