அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரமொன்று வெள்ளத்தில் மூழ்கியதில் அதில் பயணித்து காணாமல் போன 07 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று நேற்றுமுன்தினம் மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் பயணித்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்களே இவ்வாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் அன்றையதினம் மாலை இடம்பெற்ற நிலையில், வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 5 மாணவர்கள் உயிருடன் மீட்புப் குழு தேடுதல் போது காப்பாற்றப்பட்டனர்.
அதேவேளை, இரண்டாம் கட்ட மீட்பு பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 04 மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான் , பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவர்.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று காலை மீட்பு பணிகள் ஆரம்பமான நிலையில் 3 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டன.
மாணவனான அலியார் முகமது யாசீன்(வயது-15), உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத்(வயது-17) மற்றும் கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், இதுவரை மொத்தமாக 07 சடலங்கள் மீட்புப் குழுவினரால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொள்வதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு ஜனாஸாக்கள்
அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.