21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பாக கையடக்க தொலைபேசிகள் திகழ்கின்றன.
கையடக்க தொலைபேசிகள் இன்றி ஒரு நாளை கடத்துவதும் பாரிய சவாலாகவே இருக்கின்றது. ஏனெனில் எமது வாழ்வின் அன்றாட தேவைகளும் வேலைகளும் கையடக்கத் தொலைபேசிகளை மையமாகக் கொண்டே ஆற்றப்படுகின்றன.
ஆயினும் இத்தகைய பயனுள்ள தொழில்நுட்ப சாதனம் எமது வாழ்வின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது என்றால் நம்புவது சற்று கடினமே. ஆனாலும் அது தான் உண்மை.
அதிகமான தொலைபேசி பயன்பாடும் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் அத்தகைய பழக்கம் உறவுகள் மற்றும் நண்பர்கள் இடையிலான தொடர்பாடலைப் பாதிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் ஐந்து பில்லியன் கையடக்க தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன. சாதாரணமாக நாளொன்றிற்கு இரண்டு மணி நேரம் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதே சிறந்தது. ஆயினும் சராசரி மனிதனொருவன் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் என்ற விகிதத்தில் ஒரு கிழமைக்கு 35 மணி நேரம் கைப்பேசியில் செலவழிக்கிறார் என வெளிநாட்டு ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அதிகமாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதனால் அதிகளவிலான தகவல்கள் மூளையினுள் உட்செலுத்தப்படுவதால் மூளை சோர்வடைகிறது. அத்தோடு முடிவெடுக்கும் திறன், ஞாபக திறன் குறைதல் உட்பட பல மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆட்படுகின்ற வாய்ப்புகள் அதிகம்.
மேலும் பெறுகின்ற தகவல்கள் அதிகரிப்பதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு பல உள ரீதியான பாதிப்புகளுக்கும் உட்படலாம்.
உணர்வு ரீதியான பாதிப்புகளாக உறவுகளுக்கிடையிலான விரிசல் வீட்டிலும் வேலைத்தளத்திலும் இடைத்தொடர்பை பேணாமை, தனிமையை உணர்தல், எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்ற உணர்வு தோன்றல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
உடல் ரீதியான பாதிப்புகள் எவையென ஆராய்கையில் இதயம், மூளை, கண் மட்டுமன்றி முழு உடலையும் கைப்பேசிப்பாவனை பாதிக்கிறது. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவர் நிலையமானது அளவுக்கு மீறிய கைப்பேசி பாவனை மூளையில் கட்டிகள் ஏற்படவும் புற்று நோய் ஏற்படவும் காரணமாய் அமையுமென 2011 இல் அறிக்கை வெளியிட்டது. அதிக எடை உயர்வு மற்றும் இருதய நோய்கள் என்பன ஏற்படவும் அதிகரித்த கைப்பேசி பாவனை காரணமாகலாம்.
கைப்பேசியில் சமூக வலைத்தளங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் செலுத்துவதனால் அதன் பாவனைக்கு முற்றிலும் அடிமைப்படுகின்ற அபாயமும் நிலவுகிறது.
மேலும் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்றளவிலும் கைப்பேசி பாவனையால் புற்றுநோய் ஏற்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
ஆயினும் கைப்பேசியில் இருந்து வெளியேற்றப்படுகின்ற மின்காந்த அலைகள் மூளைக் கலங்களில் அசாதாரண வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்டவை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசியின் மூலம் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவ்வகை அலைகள் உருவாகும் வீதம் அதிகமாக இருப்பதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இரவில் தலைக்கருகே கைப்பேசிகளை வைத்திருப்பதும் உமிழப்படுகின்ற அலைகளின் தாக்கத்தை அதிகரிக்கும். அதிக வெளிச்சமான தொடு திரைகளை தொடர்ந்தும் பார்ப்பதனால் பார்வை நரம்பும் மூளையின் கட்புலன் பிரதேசமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
மூளை மற்றும் சுற்றயல் நரம்புத் தொகுதியை அதிகமான கைப்பேசி பாவனை தாக்கலாம் என்ற கூற்றை நிரூபிப்பதற்கான ஆய்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக சத்தத்தை கேட்பதால் மட்டுமன்றி காதுகளுக்குள் சொருகப்படுகின்ற தொடர்பு சாதனங்களால் செவிப்பறை அதிர்வதோடு கேட்டல் தொடர்பான பிரச்சினைகளும் தோன்றுகின்றன.
சமீபத்திய ஆய்வின்படி கைப்பேசி பாவனை 60 நிமிடங்களுக்கு மேலாக காணப்படுமிடத்து அதிக அதிர்வெண்ணை நமது செவிப்பறை உணர்வதால் நீடித்த கேட்டல் குறைபாடு ஏற்பாடும் என குறிப்பிடுகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் 2000 முதல் 8000 மீடிறன் கொண்ட அதிர்வலைகளை கேட்க முடியாதுபோகும். அதாவது சாதாரண பேச்சை கூட அவர்களால் செவிமடுக்க இயலாது போகும்.
அமெரிக்க செவிமடலியல் கல்லூரி நடத்திய ஆய்வின்படி தொலைபேசியால் வெளிப்படும் மின்காந்த அலைகள் செவிப்புலனில் சேதத்தை ஏற்படுத்துவதாக இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் டாக்டர் வுடால் கூறுகையில் பல சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகள் அவ்வகை மின்காந்த அலைகள் செவிப்புலனை சேதப்படுத்துவதில் பங்களிப்புச் செய்கின்றன என கூறுகின்றன.
பிரத்தியேகமான கேட்டல் உபகரணங்களால் கேட்டல் மீடிறன் எல்லை தற்காலிகமாக மாறுவதை அவதானிக்க முடிந்தது. இசையை மீண்டும் மீண்டும் அதிகளவான ஒலி அதிர்வெண்ணில் கேட்கும் போது தற்காலிக குறைபாடு நிரந்தரமாக மாறும்.
சராசரி நபர் தங்கள் கைப்பேசியை ஒரு நாளைக்கு 150 முறைக்கும் மேல் பார்க்கிறார். அடிக்கடி தொலைபேசி பயன்பாடு கண்ணுக்கு அசெளகரியத்தைக் கொடுக்கும். இது கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிகோலும்.
அமெரிக்காவில் 3 பேருக்கு இருவர் என்ற விகிதத்தில் அதிகளவிலான கைப்பேசி பாவனையினால் பார்வை குறைபாட்டுக்கு ஆளாவதாக கணிக்கப்பட்டுள்ளது. மங்கலான பார்வை, கண்ணில் வரட்சி ஏற்படல், தலைவலி மற்றும் பார்வை திரிபு என்பன ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. கண்சிமிட்டல் என்பது கண்ணின் ஈரப்பதனை பேணுவதற்கும் தூசு, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கவும் இயற்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்பாடாகும்.
ஆயினும் தொலைபேசி திரையை அவதானிக்கின்ற போது நிமிடத்திற்கு 15 முறை சிமிட்ட வேண்டிய எண்ணிக்கை பாதியாக குறைகிறது. இதன் மூலம் கண் வரட்சியடைவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்துகிறோம். கைப்பேசி திரையில் சிறிய காணொலியை அல்லது ஆக்கமொன்றை வாசிக்கும் போது நாம் அதை மிகவும் பாரதூரமான விடயமாக கருதாத போதும் அத்தகைய செயற்பாடுகளின் போது நமது கற்தசை கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் இயங்குகின்றன.
இவை கண்ணிமை தளர்ச்சி மற்றும் பார்வை மங்கலாவதற்கு காரணமாகின்றன. கைப்பேசி திரையின் ஒளியை அதிகமாக வைத்து பார்ப்பதன் மூலம் கண்கள் கூசுவதோடு கண்ணுக்கு கஷ்டத்தையும் கொடுக்கிறோம். மேலும் இருளில் கைப்பேசி திரையை பார்ப்பதும் இத்தகைய நிலைமையை தூண்டவல்லன.
கைப்பேசி பாவனையினால் மலட்டுத்தன்மை மற்றும் விந்துகளின் எண்ணிக்கை குறைதல் என்பன ஏற்படுகின்றன. கைப்பேசி பாவனை, மிகவும் உணர்திறன் வாய்ந்த திசுக்களின் மீது அதிகரித்த ஒட்சிசனேற்ற அழுத்தம், வெப்பமாதல் மற்றும் கதிர்வீச்சு மூலம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் விதையின் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. கதிர்வீச்சு விந்தணுக்களின் அளவு, விந்தணு செறிவு, விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் ஆண்களில் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது. இதனால் ஆண்களில் மலட்டுத்தன்மை தோன்றுகிறது.
ஏறக்குறைய 660,000 வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்திக்கொண்டு இருக்கும்போது தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். கைபேசிகள் எல்லா நேரங்களிலும் உலகோடு தொடர்பில் இருக்க வழிவகுக்கிறன என்றாலும் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக வலைத்தளங்களை சரிபார்ப்பது அதிக அபாயங்களை ஏற்படுத்தும்.
கைப்பேசியின் கவனச்சிதறல்கள் அதிகமான வாகன விபத்திற்கும் உயிர் மற்றும் அங்க இழப்புகளுக்கும் வழிவகுக்கின்றன.
சமீபத்திய சில ஆய்வுகள் கைப்பேசிகள் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட நோய்க் கிருமிகளுக்கான புகலிடம் என்றும் கூறுகின்றன. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் அரிப்புகள் ஏற்படுத்தக்கூடிய நுண்ணங்கிகள் உதாரணமாக ஸ்டெபைலோ கொக்கஸ் ஆரஸ் போன்றன கைப்பேசிகள் மூலம் பரவுகின்றன.
கைப்பேசிகளை கவனமாக கையாள்வதன் மூலம் இத்தகைய சுகாதார பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறோம்.-