ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமன சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
சாந்தனின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக செய்வதற்கு மூன்று தரப்புகள் சிறப்பாக பங்களிப்பு செய்திருக்கின்றன.
ஒன்று மரண நிகழ்வைப் பொறுப்பெடுத்த குரலற்றவர்களின் குரல் அமைப்பு. இரண்டாவது குடும்பத்தவர்கள், மூன்றாவது.சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி. உண்மையில் இந்த மூன்று தரப்பும் தான் சாந்தன் அவர்களுடைய மரண சடஙகுகள் சிறப்பாக நடப்பதற்க்கு பிரதானமாக பங்களித்தவர்கள் என்று கூறலாம்.
சாந்தன் அவர்களுடைய மரணம் ஒரு இயற்கை மரணம் என்று கூறி விட முடியாது.
அது ஒரு செயற்கையான மரணம் அது தவிர்த்து இருக்க வேண்டிய மரணம். அதுவும் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்.
சிறையில் படாத கஸ்ரங்கள் இல்லை. சிறையில் சுகதேகியாக இருந்தவர் பின்னர் சிறப்பு முகாமில் மரணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த மரணத்தைப் பொறுத்த வரையிலே நான்கு தரப்புகள் பொறுப்பாளிகள்.
முதலாவது இந்திய மத்திய அரசு. இந்திய மத்திய அரசு நீதிமன்றம் விடுதலை செய்தத பின்னர் அவர்களை விரைவாக இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
இந்தியாவினுடைய வெளிநாட்டு அமைச்சினுடைய உத்தியோகஸதர்கள், வெளிநாட்டு அமைச்சினுடைய செயலாளர், வெளிநாட்டு அமைச்சருக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு.
அடிக்கடி அவர்கள் வந்து போகின்ற நிலைமைகளும் உண்டு.
இதனைப் பேசிய தீர்ப்பதற்கு ஒரு நாளும் நேரம் கிடைத்திருக்காது என்று ஒருநாளும் கூறி விட முடியாது.
அவர்களுக்கு அங்கே விருப்பம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை
சாந்தன் உயிருடன் இலங்கைக்கு செல்வதை இந்திய மத்திய அரசு விரும்பியிருக்கவில்லை என்பதுதான் இதற்க்கு பின்னால் இருந்திருக்குன்ற செய்தி
இரண்டாவது பொறுப்பு தமிழ்நாடு மாநில அரசு. தமிழ்நாட்டு மாநில அரசை பொறுத்தவரையில் அதற்க்கு இரண்டு பொறுப்புகள் இருந்தன
ஒன்று இந்தியா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சாந்தனை விரைவாக இலங்கைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருந்தது. சிறப்பு முகாம் தமிழ்நாடு அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற முகாம்.
ஆகவே அங்கே சாந்தனை கவனமாக பேணுகின்ற செயற்பாட்டை செய்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு பொறுப்புகளிலிருந்தும் தமிழ்நாடு அரசு தவறியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஈழத் தமிழர்களது போராட்டத்தோடு தங்களை தொடர்பு படுத்துகின்ற கட்சி என்று தங்களை அடையாளப் படுத்துகின்ற, திமுக கட்சி ஆட்சியில் இருக்கின்ற ஒரு அரசாங்கம்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்தாதது மிகவும் கவலைக்குரியது என்பது எங்களுடைய அபிப்பிராயம்.
அங்கே சிறையை விட மோசமாக சிறப்பு முகம் இருந்தது என்று கூறப்படுகிறது.
சிறையிலாவது அங்கு ஒரு ஒழுங்கு விதிகள் இருக்கும். அந்த ஒழுங்கு விதிகளின் படி தெரிந்தவர்கள், உறவினர்கள் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் அங்கு இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் இருக்கும் மருத்துவ கவனிப்பு இருக்கும்.ஏதாவது தவறு நடந்தாலும் அரசு தலையிடக் கூடிய சூழல் அங்கு இருக்கும். இவ்வாறான ஒழுங்கு விதிகள் எதுவும். சிறப்பு முகாமில் இருக்கவில்லை.
சிறப்பு முகாமில் நாள் முழுதும் அறைக்குள் அடைக்கப்பட்ட நிலமைதான் காணப்பட்டிருக்கிறது.மருத்துவ கவனிப்பு என்பது கொஞ்சமும் இருக்கவில்லை.
அதைவிட உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
தெரிந்தவர்கள் உறவினர்கள் வந்து சந்திப்பதற்கான ஒழுங்குகள் கூட அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. மிக மோசமான ஒரு வதை முகமாகவே சிறப்பு முகாம் இருந்திருக்கிறது.
சிறப்பு முகாமில் ஒழுங்காக கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
அதைவிட போதைவஸ்து காரர்களுடன் இணைத்து வைத்திருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
சாந்தனை பொறுத்தவரையிலே அவர் ஒரு அரசியல் கைதி.
அரசியல் கைதி என்ற வகையிலே அவரை சிறப்பாக வேறு இடத்தில் வைத்து கவனிக்க வேண்டிய பொறுப்பு ஒன்று இருந்தது. அந்தப் பொறுப்பை செய்யவில்லை.
ஆகவே இந்த விடயத்தில் தமிழ்நாடு மாநில அரசுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது என்றே நான் நினைக்கின்றேன்.
மூன்றாவது தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் அரசியல் தலைமகளுக்கு மத்திய அரசோடும் தொடர்பு இருக்கிறது மாநில அரசோடும் தொடர்பு இருக்கிறது. இலங்கை அரசோடும் தொடர்பு இருக்கிறது.
இந்த மூன்று தரப்புகளுடனும் கதைத்து அவர்களுக்கான அழுத்தங்களைக் கொடுத்து சாந்தனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் அது தொடர்பாக இந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை.
இது தொடர்ச்சியாக செய்ய வேண்டிய ஒரு செயல்பாடு.
அவர்கள் அது தொடர்பாக எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.
கடைசியாக. சாந்தனுடைய குடும்பத்தவர்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்ற பின்னர் தான் ஸ்ரீதரன் மனோகணேசனை அழைத்துச் சென்று ரனில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேசி இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க உடனடியாகவே அதற்கான சம்மதத்தை தெரிவித்திருக்கின்றார்.
இதனை முன் கூட்டியே செய்திருந்தால் சாந்தனை உயிரோடு இலங்கைக்கு கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும்.
இங்கு வந்ததன் பின்னர் இறந்திருந்தால் பெற்றோர்களோடு இருந்து இறந்திருக்கின்றார் என்ற நிம்மதியாவது சாந்தனுக்கு கிடைத்திருக்கும். அது கூட கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கவில்லை
அந்த வகையிலே நான்காவது பொறுப்பு இலங்கை அரசாங்கத்தினுடையது.
இலங்கை அரசாங்கம் சாந்தன் இலங்கை பிரஜை என்ற வகையிலே நீதி மன்றத்தால் விடுதலை செய்த பின்னர் சாந்தனை இலங்கைக்கு கொண்டு வர வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தவில்லை ஆகவே இந்த நான்கு தரப்பும் சேர்ந்து தான் சாந்தனை கொலை செய்து விட்டார்கள் என்று குறிப்பிட வேண்டும்.
உண்மையிலேயே சாந்தன் வந்த இந்த கொலை குற்றத்தோடு தொடர்புடையவரும் அல்ல.அவர் வேண்டுமென்றே அதிலே சேர்க்கப்பட்டவர்.இதனை விசாரித்த நீதிபதிகளே இப்போது மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்.
நேரடியாக தொடர்பு படாத நபர்கள். அந்த விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற வகையிலே கைது செய்யப்பட்டு. இவ்வளவு காலம் சிறையில் வைத்து மோசமான சித்திரவதை எல்லாம் அனுபவித்து. கடைசியிலே இறக்க வேண்டிய சூழ்நிலைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆகவே இந்திய அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே இந்த கொலைக் குற்ற மீள் விசாரணையை சர்வதேச மத்தியஸ்தத்துடன் அல்லது சர்வதேசம் நீதியாளர்கள் முன்னிலையில் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற பிரேரணையை நாங்கள் முன் வைக்கலாமா என்கின்ற ஒரு யோசனையையும் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டிய வேண்டியது அவசியமானது. இப்போது சாந்தன் இறந்துவிட்டார்.
ஆனால் மீதி மூன்று பேர் அங்கு இருக்கிறார்கள். அந்த மூன்று பேரை யாவது பாதுகாப்பாக இங்கே கொண்டுவர வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றன.
ஆகவே தமிழ் அரசியல் தலைவர்கள் இதிலே மிகுந்த கவனம் எடுத்து.பொறுப்போடு இந்த விடயத்தை கையாள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக இங்கே பூதவுடலோடு வந்த புகழேந்தியும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். நீங்கள் வந்து சிறப்பு முகாமை பாருங்கள் அது எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பாருங்கள். அரசாங்கத்தோடு பேசுங்கள். மற்ற மூவரையும் இங்கே கொண்டு வருவதற்க்கான முயற்சிகளை செய்யுங்கள், அவர்கள் இங்கு வரும் வரை அந்த சிறப்பு முகாமிலிருந்து தெரிந்தவர்கள் வீட்டிலேயோ அல்லது நண்பர்கள் வீட்டிலேயோ சுதந்திரமாக இருப்பதற்க்கான ஒழுங்குகளை செய்யுங்கள் என்று சொல்லி அவர் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டு - என கூறினார்.