நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.
நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களிலேயே குறித்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பொத்துபிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ள நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் சிலருடன் வந்து பொல்லால் அடித்து கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் அதே பிரதிஷத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் இனந்தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் அல்லது கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய கொலைச் சம்பவம் நேற்று இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வரையான கிளை வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.