12 யானைகள் இறப்பு;31 யானைகள் மாயம்-நடந்தது என்ன?

154

ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் யானைகள் உயிரிழந்தமை மற்றும் யானைகள் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை நடத்துமாறு வனவிலங்கு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து 5 யானைகள் 2019ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான தேசிய கணக்காய்வு அறிக்கை, 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கணக்காய்வு அறிக்கையின் ஊடாகவே இந்த விடயம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஹொரோவ்பத்தானை பகுதியில் 997 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த யானைகள் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்திலிருந்த 30 யானைகளின் உணவுக்காக 2 கோடியே 61 லட்சத்த 33 ஆயிரத்து 700 ரூபா ஒப்பந்தக்காரருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், விநியோகிக்கப்பட்ட உணவுகளின் ஊட்டச்சத்து தொடர்பில் உரிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.

யானைகளின் உணவுக்காக உட்கொள்ளும் தாவரங்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்படாது, உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யானைகள் உட்கொள்ளாத தாவரங்களை, உடன்படிக்கையில் குறிப்பிட்டு, பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

யானைகளின் உணவுக்கான எடையை நிறுப்பதற்காக, தனியார் ஆலையொன்றில் பொருத்தப்பட்ட தராசின் ஊடாகவே கணிப்பிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஆராய்வதற்கான அதிகாரியொருவரை கூட நியமிக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரோவ்பத்தானை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி வரையான கால எல்லைக்குள் 52 யானைகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

எனினும், 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் 09 யானைகள் மாத்திரமே எஞசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் 12 யானைகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், எஞ்சிய 31 யானைகள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: