• Dec 01 2022

தாதியர் கல்லூரியொன்றை அமைக்குமாறு BMS-நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திடம் பிரதமர் வேண்டுகோள்!

Tamil nila / 6 days ago
image

BMS வர்த்தக முகாமைத்துவப் பாடசாலை மற்றும் அதன் பிரித்தானியப் பங்காளியான ஐக்கிய இராச்சியத்தின் நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திடம் அடுத்த வருடத்திற்கான விரிவாக்கத் திட்டங்களின் கீழ் தாதியர் கல்லூரி ஒன்றை நிறுவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். 


வர்த்தக மற்றும் பொருளியல் துறை பட்டதாரிகளுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களை உலகளாவிய மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பிற்கு தகுதியுடையவர்களாக மாற்ற விசேட கல்வித் திட்டங்களை ஆரம்பிக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.



நோர்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜோன் ரீஸ்ட் மற்றும் BMS கல்லூரியின் தலைவர் கலாநிதி டபிள்யூ ஏ விஜேவர்தன ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் அவர்கள் இதனைத் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருளியல், நிதி முகாமைத்துவம், வர்த்தக பேச்சுவார்த்தைகள், தாதிச் சேவை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளில். திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட கற்கை நெறிகளின் அவசியத்தையும் பிரதமர் இதன் போது வலியுறுத்தினார்.

 

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் நெருங்கிய  ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களுடன் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்பட்டது.


வர்த்தக முகாமைத்துவப் பாடசாலை (BMS) 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, மேலும் இது பிரித்தானியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து உயர்தரக் கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது, 


இக், கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதம நிறைவேற்று அதிகாரி நிசாம் ரசாக் மற்றும் BMS அதிகாரி சுராஜ் எகொடகமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.