'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ், அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டத்தை இன்று காலை(09) கல்நேவ பிரதேச செயலக பிரிவில் மல்பொலிகல பிரிவு, அலுபத்த கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 - 25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு, வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31,000 வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 50,000 - 55,000 வீடுகள் வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, அனர்த்தத்தினால் முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளை புனரமைப்புக்கான இழப்பீடு வழங்கப்பட்டது.
அத்தோடு புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் உறுதியளித்தார்.
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, அனர்த்தத்தினால் முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளை புனரமைப்புக்கான இழப்பீடு வழங்கப்பட்டது.அத்தோடு புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு பாரிய நஷ்டஈடு வழங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்த அரசாங்கம் என்றும், அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த மக்களுக்கு அவர்கள் முன்பு இருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப உறுதியாக செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.
அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் உறுதியளித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:
"சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மோசமான பொருளாதார அனுபவங்களுக்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எரிபொருள், எரிவாயு இன்றி முழு நாடும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்தப் பொருளாதார வீழ்ச்சி இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது நாட்டை நீண்டகாலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பொதுமக்களின் செல்வத்தை ஒரு சிறிய குழுவினருக்குள் மையப்படுத்தியமை என்பனவே இதற்குக் காரணமாகும்.
திறைசேரியில் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டாலும், மிகச் சிலருக்கு மத்தியில்தான் அந்தப் பணம் குவிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு இவையே காரணங்களாகும். இதன் விளைவாகவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்கள் வீதியில் இறங்கி, அதிகாரத்தில் இருந்த தலைவர்களை விரட்டியடித்தனர்.
நாம் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் , வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது முதல் சவாலாக அமைந்தது. அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை நாம் ஈட்டியுள்ளோம். எமது பெற்றோர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை எமது பிள்ளைகள் எதிர்கொள்ளாத ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் அனுபவித்த துன்பங்களை எமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது. எனவே, எமது பிள்ளைகள் சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பொறுப்பாகும்.
நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதிலேயே நாட்டின் பல விடயங்கள் தங்கியுள்ளன. நாடு பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்தால் பல விடயங்கள் சீராகும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் குற்றங்கள், ஊழல்கள் அதிகரித்து, சட்டத்தின் ஆட்சி சீர்குலையும். எனவே, பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதே மிக முக்கியமான விடயமாகும். அதற்காகவே நாம் படிப்படியாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வந்தோம்.
2025 ஆம் ஆண்டு, இலங்கையின் அனைத்துப் பொருளாதாரக் காரணிகளிலும் அதிக மதிப்பைச் சேர்த்த ஆண்டாக அமையும். அதிக அரச வருமானம், 1977-க்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, அதிக ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து அதிகளவான பணம் வந்தடைந்தமை மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக இது மாறியுள்ளது.
இவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் நிலையிலே இந்த இயற்கை அனர்த்தத்திற்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இயற்கை அனர்த்தங்களை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. உலக வங்கியின் ஆய்வின்படி, உட்கட்டமைப்பு சார்ந்த இழப்பு மட்டும் 4.1 பில்லியன் டொலர்கள் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மீண்டெழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்திற்கு இது ஒரு பெரும் தாக்கமாகும். ஆனாலும், அதற்காக அனர்த்தத்தைச் சந்தித்த மக்களைக் கைவிட அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களைக் காத்திருக்குமாறு கூறு முடியாது. எனவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒரு பாரிய திட்டத்தை அரசாங்கமென்ற வகையில் நாங்கள் முன்வைத்துள்ளோம்.
2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்த அனர்த்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திற்காக 7,200 கோடி ரூபா ஒதுக்கியுள்ளோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.அதேவேளை பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நாம் நஷ்டஈடு வழங்கி வருகிறோம். விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு நஷ்டஈட்டுத் தொகையை நாம் வழங்க இருக்கிறோம். கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நாம் அந்த நிவாரணங்களை வழங்க உள்ளோம். மேலும் அடையாளம் காணப்பட்ட துறைகளின் தரவுகளை நாம் சேகரித்து வருகிறோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்த அரசாங்கம். இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த ஆட்சியாளரும் இது போன்ற பாரிய இழப்பீடுகளை வழங்கி மக்களைப் பாதுகாக்கத் தலையீடு செய்யவில்லை.ஆனால் நாம் அதனைச் செய்து வருகிறோம்."
வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். சுமார் 6,000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த சேதமும் இல்லாவிட்டாலும், சுமார் 17,000-18,000 வீடுகள் வசிக்கத் தகுதியற்றவை என அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சுமார் 20,000-25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியிருக்கும்.
அது மட்டுமல்லாமல், 2026 வரவு செலவுத்திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கியுள்ளோம். வீடுகளை நிர்மாணிக்க முடியாத மக்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், 10,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 2009 இல் யுத்தம் முடிவடைந்த போதிலும், இன்னும் மக்கள் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். அந்த மக்கள் 16 ஆண்டுகளாக வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் அந்த மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கியுள்ளோம். மேலும், மலையக மக்களுக்கு வீடுகளைக் நிர்மாணிப்பதற்கு இந்திய உதவியின் கீழ் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு, 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டடிிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த அனர்த்தத்தினால் மேலும் 20,000-25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது.
அந்த மக்கள் முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கையைப் பெறும் வகையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவே நாம் செயற்பட்டு வருகிறோம். அதற்காகவே இந்தப் பணத்தை வழங்குகிறோம். எனவே, விரைவில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
நமக்கு பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. நமக்கு சிறந்த வருமானம் தேவை. நமது பிள்ளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, நல்ல வீடு, உள நலம் ஆகியவை முக்கியமானவை. குறைந்தபட்சம் இந்த ஐந்து விடயங்களையாவது நிறைவேற்றாமல் வாழ்வது கடினமானது. எனவே, நமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதாகும்.
நீண்ட காலமாக, நம் நாட்டின் கல்வி முறையில் சிக்கல்கள் காணப்பட்டன. பெற்றோருக்கு சுமையாகவும், பிள்ளைகளுக்கு வேதனையாகவும் உள்ள ஒரு கல்வி முறையாக இது இருந்தது . கல்வி முறை சிறந்ததாக இருந்திருந்தால், நமக்கு சிறந்த பலன்கள் கிடைத்திருக்கும். கல்வியலாளர்கள் நீண்ட காலமாக இந்த கல்வி முறையில் புதிய மாற்றம் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். நாம் அந்தப் புதிய மாற்றத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஆனால் பல்வேறு அவதூறுகளையும் பொய்களையும் பரப்பி, ஆதாரமற்ற விடயங்களை கூறத் தொடங்கியுள்ளனர். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எமது நோக்கம். வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழி பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதாகும். எனவே, நமது பிள்ளைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வியை வழங்க வேண்டும். யார் எவ்வாறு அந்த வேறுபாடுகளை தடுக்க முயற்சித்தாலும், நாம் அந்த வேறுபாடுகளை உருவாக்குவோம்.
நாம் இந்த வீட்டுத் திட்டத்தை இன்று செயல்படுத்துகிறோம். 31,000 வீடுகளை நிர்மாணிக்க நாம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம், அந்த எண்ணிக்கை 50,000 - 55,000 ஆக அதிகரிக்கும். அதன்படி, இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் ஒரு வருடத்தில் நிர்மாணிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளாக இது அமையும். நமது நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு வீட்டை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்'' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும:
முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்த விடயத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபா வழங்கியுள்ளோம். அதேபோன்று 50,000 ரூபா கொடுப்பனவையும் வழங்கி வருகிறோம். மிகச் சிறந்த நிதி முகாமைத்துவத்தின் மூலம் திறைசேரியில் சேமித்த நிதியைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கத்தினால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடிந்தது.
அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய:
ஒரு வீட்டை நிர்மாணிக்க 50 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இது 03 தவணைகளாக வழங்கப்படுகிறது. இன்று முதல் தவணை தொகை வழங்கப்படுகிறது. முதல் தவணையாக 20 இலட்சம் ரூபாவும் இரண்டாவது தவணையாக 15 இலட்சம் ரூபாவும் அடுத்த கட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.எனவே, எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வழங்கப்படும் பணம், குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய மேற்பார்வை மேற்கொள்ளப்படும். எனவே, பயனாளிகள் வழங்கப்படும் இந்தப் பணத்திலிருந்து சரியான பலனைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான திலின தாருக சமரக்கோன், சுசந்த குமார நவரத்ன, பீ.பீ.என்.கே. பலிஹேன, பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோரும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


