இலங்கை மின்சார சபையின் (CEB) மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்றை நடாத்துவதற்கு பொது நிறுவனங்களுக்கான குழு (COPE) தீர்மானித்துள்ளது.
CEB தொடர்பான விடயங்களை ஆராயும் வகையில் எதிர்வரும் காலங்களில் தனித்தனியாக கூடி விசேட கூட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) கோப் குழு கூடியபோது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 10 ஆம் திகதி, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த திகதியில் நேரமின்மை காரணமாக பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட முடியவில்லை.
இலங்கை மின்சார சபையின் கொள்வனவுகள், விநியோகங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூறப்பட்ட விடயங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, உற்பத்தித் திட்டம் உள்ளிட்ட சகல விடயங்களையும் ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவரிடம் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய குழு விசேட கூட்டமொன்றை நடாத்த முடியும் என சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர், இதன் மூலம் இந்த விடயத்தை சிறப்பாக ஆராய குழுவிற்கு முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்படி, அங்கிருந்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய விசேட கோப் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பிற செய்திகள்