ஒரு விளையாட்டு வீரனாகப் பரிணமித்து தற்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சிபுரியும் கொலை அரசாங்கம் சார்ந்த அரசியலுக்குத் தானும் பலியாகி தனது தம்பியையும் ராஜபக்சவின் கட்சி அரசியலில் ஈடுபடுத்தியிருப்பவர் தான் முத்தையா முரளிதரன்.

இவர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மை. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 800 படத்தின் அரசியல் நோக்கம் தமிழ் மக்களின் தேசியத்தைச் சிதைக்கும் நோக்குள்ளதன்றி வேறெதுவாகவும் இருக்கமுடியாது என்று மலையகத்தைப் பின்னணியாகக் கொண்ட மனிதநேய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும் முற்போக்குவாதியுமான அருட்தந்தை கொழும்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.

இந்த முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும். இதற்கு தமிழக நடிகர் விஜய் சேதுபதி துணை நிற்கக்கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவர். அதைப் போன்று மக்கள் மத்தியிலே சமத்துவம் இருக்கவேண்டும் என்று போராடிய ஒருவர்.

ஆனால், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்த்துநிற்கின்ற முரளிதரனாக அவர் நடிப்பதென்பதை தமிழ் மக்களாக எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மலையக மக்களின் உரிமைக்காகவும் வட கிழக்கு வாழ் தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவரும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சார்ந்தவர் என்றபோதும் கூட மலையக மக்களுக்காகச் செயற்படாத ஒருவர். ஏனென்றால் தற்போதைய ஆட்சியாளர்கள் எப்போதுமே மலையகத்துக்கு எதிராகத்தான் செயற்பட்டிருக்கிறார்கள். மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காதவர்கள். அந்த அரசியலில்தான் தன்னையும் முரளிதரன் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் என்றார் அருட்தந்தை சக்திவேல்.

முரளிதரன் பற்றிய திரைப்படம் அவரது விளையாட்டு வீரன் பின்னணி சார்ந்து எடுக்கப்படுவதாகத் தோற்றமளித்தாலும் அதற்குப் பின்னால் பாரிய ஓர் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும் என்றார் சக்திவேல். இது தமிழினத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தமிழின அழிப்பைத் தொடரும் அரசியலின் ஒரு செயலாகவே பார்க்கப்படவேண்டியது.

இந்தப் படத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச நிதியுதவி வழங்குவதாகச் சில தகவல்கள் வெளியாகியிக்கின்றன.

ஆகவே ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பாக, தமிழினத்தின் தேசியத்தின் சார்பாக நாங்கள் கேட்பது உலகளாவிய தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியத்திலே அக்கறையுள்ள முற்போக்குச் சக்திகளும் இதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்றார் அருட் தந்தை சக்திவேல்.

-நன்றி கூர்மை-