• Dec 01 2022

ரணிலின் ஆசை வார்த்தையும் - தமிழ் மக்களின் ஏக்கமும் - விடிவும் விடுவிப்பும் எப்போது?

harsha / 1 week ago
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுடன் நேரடியாக இன பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவேன் என கூறியுள்ளார். நவம்பர் பத்தாம் திகதி  பாராளுமன்றத்தில் அவர் குறிப்பிடும்போது, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரும் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்பு நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என வாக்களித்துள்ளார். அவர் கூறுவது போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாக இருந்தால், முதலில் நீண்ட காலம் சிக்கலுக்கு உரியதாக இருந்து வரும் நிலப் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவும் இலங்கையில் உள்ள இனப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்துவதால், தற்போது இலங்கை மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் செயற்பாடுகள் தொடர்பான படிப்பினைகளை/ ஆலோசனைகளைப் பெறுவதற்காக மீண்டும் தென்னாப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஏற்கனவே இலங்கையில் இருந்து தூதுக்குழு ஒன்று இது தொடர்பாக தென்னாபிரிக்காவிற்கு சென்றிருந்தது.

எவ்வாறாயினும் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு உடன்பாடாக இருக்கவில்லை என்பதால் நாளடைவில் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.


அப்போது தென்னாபிரிக்கா தலைவராக இருந்த சீரில் ராமபோசா அவர்கள் கடந்த வாரம் BIA சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதே விடயத்தை மீண்டும் வலியுறுத்தி இருந்தார். தற்போது மீண்டும் ஒரு தூதுக்குழு தென்னாபிரிக்காவிற்கு செல்வதன் மூலம் இந்த முயற்சி மீண்டும் சரியான முறையில் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தற்போது நல்லெண்ணத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கனேடிய தமிழ் காங்கிரஸின் தடையை நீக்கியுள்ளது. நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் கனேடிய தமிழ் காங்கிரஸின் (CTC) தலைவர் சிவ இளங்கோ மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா ஆகியோரை கொழும்புக்கு அழைத்திருந்தார். நவம்பர் 16 ஆம் திகதி நீதியமைச்சர், CTC அமைப்பின் பஞ்சலிங்கம் கந்தையா அவர்களை நீதி அமைச்சில் சந்தித்தபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அமைப்பை தடைப்பட்டியலில் இருந்து நீக்கி, நல்லிணக்கச் செயல்பாட்டில் பங்கேற்க அனுமதித்ததற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றையும் கந்தையா CTCயிடம் வழங்கினார். 2022 ஆகஸ்டில் கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) உட்பட பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கிய உடனேயே, CTC அமைப்பு உறுதியான பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது.


ஐக்கிய இராச்சியம்,அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அனைவரும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுவிக்குமாறும், 2021 ஆம் ஆண்டின் UNHRC தீர்மானம் 46/1 க்கு இணங்குமாறும், அத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து தனியார் நிலங்களையும் விடுவிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்கள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து சட்டவிரோத நில அபகரிப்புகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் விடயம் உள்ளடக்கப்பட்டு இருந்தது. இப்பிரச்சினைகள் சரி செய்யப்படும் பட்சத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர்.


நல்லிணக்கச் செயற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகள் பற்றிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் உள்ளடக்கிய சரியான புள்ளிவிபரம் இல்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தமிழர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு விதமான பட்டியலை பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் வைத்திருக்கும் அதே வேளையில் இதே விடயம் தொடர்பில் அரசாங்கம் வைத்திருக்கும் பட்டியல் வேறு விதமானதாக உள்ளது.

 தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்வது, ஹோட்டல்களை நடத்துவது, நில உரிமையாளர்களை சரியான தகவல்கள் பெற முடியாத நிலையில் வைத்திருப்பது போன்ற விடையங்கள் தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறி உள்ளது.

1986 ஆம் ஆண்டு முதல், யுத்தம் வடமாகாணத்தை சீரழிக்க ஆரம்பித்த நாளில் இருந்து, ​​காணி உரிமையாளர்கள் உறவினர் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்ந்து வந்தனர். போர் ஆரம்பித்த காரணத்தால், இராணுவ முகாம்கள் தேவைப்பட்டன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முப்படையினர் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி பொது அறிவிப்புகளை வெளியிட்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் மக்களை வெளியேற்றினர். அதே சமயம் பயங்கரவாதிகள் (தமிழ்ப் புலிகள்) அழிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் இங்கே திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தில் உறுதியளித்திருந்தது.

இந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் உடமைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறினர். ஆனால் அந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அவர்கள் இன்னும் தங்கள் நிலத்திற்கு திரும்பவில்லை.

வலிகாமம் வடக்கின் பல பகுதிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் 3,000 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த காணிகளை அரசாங்க அதிகாரிகள் கையகப்படுத்த பல தந்திரங்களை கையாண்டுள்ளனர். அவை இப்போது இராணுவ முகாம்களாக உள்ளன.


நிலப் பிரச்சினையில் இன மோதல்கள் தொடங்கின, அதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் பல உரிமைகள் மீறப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு எண்ணிக்கையற்ற தடவைகள் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது மற்றும் வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பது தொடர்பாக பேசியுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 2019 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்ட பல காணிகள் இருந்தன. தையிட்டி பிரதேசத்தில் கிராம சேவையாளர் பிரிவுகளான தையிட்டி வடக்கு ஜே/249 மற்றும் தையிட்டி தெற்கு ஜே/250 ஆகிய பகுதிகளில் 19.6 ஏக்கர் காணிகள் 22 ஜனவரி 2019 அன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

பலாலி உயர்பாதுகாப்பு வலயங்களில், பலாலி தெற்கு ஜே/252 (ஒட்டகபுலம்) கிராம சேவையாளர் பிரிவுகளில் 23.5 ஏக்கர் காணி 23 ஜனவரி 2019 அன்று பாதுகாப்புப் படையினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. காணிகளை கையளிக்கும் உறுதி பாத்திரங்கள் யாவும், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவ ஸ்ரீ அவர்களுக்கு 515வது பிரிவின் பாதுகாப்பு படைத் தளபதியால் கையளிக்கபட்டிருந்தது.

அதே பிரதேசத்தில் அதிகமான காணிகள் தனியார் உரிமையாளர்களைக் கொண்ட காணிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2022 செப்டெம்பர் 23 அன்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு 1,614.11 ஏக்கர் காணியை அளவீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. பல இராணுவ முகாம்களைக் கொண்ட உயர் பாதுகாப்பு வலயம் இதில் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தில் குறித்த பகுதி ராணுவத்திற்கு உரிய பிரதேசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வலிகாமம் வடக்கில் உள்ள பல பொதுமக்களின் சொத்தாக உள்ள காணிகளை ராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காகவே இந்த சர்வே மேம்போக்காக இடம்பெற்றுள்ளது என பிரதேசவாசிகள் கருதுகின்றனர்.


தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் சிறு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள இராணுவத்தினருக்கு அவர்களின் காணிகள் அளவீடு செய்து வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஊகித்துள்ளனர்.

இது தொடர்பாக சிலோன் டுடே ஊடகத்துக்கு தகவல் வழங்கிய போராட்டக்காரர்கள் குறிப்பிடும் போது, தனியார் உரிமையாளர்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கு ஆளுநர் உதவுவதாகக் குற்றம் சுமத்தி பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக கூறியுள்ளனர். அதே சமயம்“தனது பணிகளில் இடையூறு செய்யக்கூடாது, தலையிடக்கூடாது” என்று ஆளுநர் கூறியுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.


மேலும் பிரதேச செயலகம், தனியார் காணி உரிமையாளர்களுக்கு அவர்களது காணிகளை அரசாங்க நில அளவையாளர்களுக்கு அடையாளம் காட்டுமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, காணி உரிமையாளர்களது கருத்துபடி, உடனடியாக தமது காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கான முயற்சி இது என கூறுகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளின் பட்டியலை சிலோன் டுடே  ஊடகம் திரட்டி உள்ளது. வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த குழு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க அதிபர் அலுவலகம் (கச்சேரி) ஆகியவற்றால் இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது: