கற்பிட்டி, உடப்பு கரையோர பகுதிகளுக்கு டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

புத்தளம் மாவட்டத்தின் கரையோர பகுதிகளான கற்பிட்டி மற்றும் உடப்பு கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்த இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, கற்பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

அதனையடுத்து, கற்பிட்டி பிரதேச செயலகத்தில் விஷேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இங்கு, கற்பிட்டி மற்றும் பத்தலங்குண்டு, முகத்துவாரம், உச்சமுனை உள்ளிட்ட தீவு மீனவர்கள் எதிர்நோக்கி வரும் மண்ணண்ணெய் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன், துறைமுகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் கண்காணிப்பு கமெராக்களை பொருத்துதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாவனையற்ற படகுகளை அகற்றுதல் உட்பட பல்வேறு விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவை தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில்,

மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீனவர்களைப் பொருத்த அளவில் பெரும் பிரச்சினையாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.

இதுதொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். விரைவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர்களுக்கும் டீசல் மற்றும் மண்ணண்ணெய் வழங்க கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் தனிப்பட்ட வகையில் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறேன்.

இதேவேளை, இந்திய மீனவர்கள், ரோலர் மீன்பிடிப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வருகின்றன. இந்தப் பிரச்சினை மிக நீண்ட காலமாக காணப்படுகிறது. திருடர் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள். அதுபோலவே இந்த விடயத்தில் இந்தியாவும் புரிந்து நடக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பிலும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். இந்திய ரோலர் மீன்பிடி படகுகளினால் எமது நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், கடல் வளம் பாதிக்கப்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்தின் மற்றுமொரு கரையோர பகுதியான உடப்பு கிராமத்திற்கும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.

உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் உடப்பு கிராமத்தில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலரிப்பையும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உடப்பு கிராமத்தில் காணப்படும் கடலரிப்பை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கிடு செய்யப்படும் எனவும் அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

அமைச்சரின் இந்த கள விஜயத்தின் போது கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் இன்பாஸ், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் கே.தட்சணாமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை