மீண்டும் பொதுமுடக்கம் நோக்கிச் செல்கிறதா இலங்கை!

இந்துசமுத்திரத்தின் முத்து என பல்வேறு நாடுகளால் சிறப்பிக்கப்பட்ட இலங்கை இன்று கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான கோசங்கள் ஒலிக்கத் தொடங்கியது. அதேவேளை எரிபொருள் எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒன்றுதிரண்டு பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஒன்றுகூடிய சமயத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இணைந்து கடந்த சித்திரை மாதம்09ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

இவ்வாறாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் தனிநபர்களும் பல்வேறு உதவிகளை வழங்கியதுடன் குறித்த தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவையும் வழங்கினர்.

இந்நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களமானது கோட்டா கோ கம என பெயரிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் இன்று வரை முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இவ்வாறாக நாளுக்கு நாள் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்கள் அதிகரித்து வந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியது.

இவ்வாறான நிலையில் கடும் எதிர்ப்புக்கள் மற்றும் அரசியற் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.

அவரது இராஜினாமாவை அடுத்து அமைச்சரவையும் முற்றாக கலைக்கப்பட்டதுடன் அரசியல் ரீதியில் பல்வேறு குழப்ப நிலைகளும் தோன்றியது.

இந்நிலையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பிரதமராக ரணில் பதவியேற்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டனர். அதேவேளை இந்தியா சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களையும் தங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இவ்வாறாக அரசியல் ரீதியில் பல்வேறு மாற்றங்கள் நியமனங்கள் நடைபெற்று வரும் சம வேளையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.

அதேவேளை நாட்டில் டொலர் தட்டுப்பாடும் தீவிரமடைய தொடங்கியது.இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கையால் பணம் செலுத்த முடியாத நிலை உருவாகியதுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டிற்று வருகை தந்த எரிபொருள் கப்பல்களுக்குரிய கட்டணங்களை செலுத்துவதற்கு கூட டொலர்கள் இல்லாத நிலையில் இலங்கை கடற்பரப்புக்களில் எரிபொருள் கப்பல்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிய அதேவேளை கப்பலுக்குரிய தாமதக் கட்டணங்களும் நாளுக்கு நாள் செலுத்தவேண்டிய நிலையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

இவ்வாறாக நெருக்கடி நிலை அதிகரிப்பின் எதிரொலியாக அரச அலுவலகங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதோடு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டன.

இவ்வாறான நிலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுக்கு வீதிகளில் நீண்ட வரிசை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகள் மின்தடை போன்றவற்றினால் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இத்தோடு நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் நீண்ட நேர மின்தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடையும் எனவும் பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேவேளை நாட்டில் தற்போது ஆயிரத்து 100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லையென்றால்,பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் குறித்த நாழிதல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் எனவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எப்போது கிடைக்குமென பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை