• Dec 03 2024

ஜே.வி.பியின் வருகைக்குக் காரணமான அரசியலும் ஜே.வி.யின் ஆட்சியில் நடந்தேறப்போகும் நாற்றங்களும்..!

Sharmi / Oct 11th 2024, 11:00 am
image

இலங்கைத்தீவானது தற்போது எதிர்கொள்வது பொருண்மிய நெருக்கடியென்றும், அதனைத் தீர்த்து வைக்கப்போகும் மீட்பராக அனுரகுமார திசாநாயக்க வரலாற்றிற் பதிவாகப் போகின்றார் என்றும் அலப்பறைகள் விண்ணதிர முழங்குகின்றன.

நாட்டில் 76 ஆண்டுகளாகத் தொடர்ந்த தவறான அரசியற் பண்பாடும், பொருண்மியப் பண்பாடுமே இன்றைய இந்த அவலநிலைக்குக் காரணமாகின என்றும், அத்தகைய நீண்ட நெடிய சிக்கலை ஒரு அமைப்பு மாற்றத்தின் மூலமாக மாற்றியமைக்க வந்திருக்கும் புரட்சிக்காரர் அனுரகுமார என்றும் மக்களை நம்பவைப்பதற்கான கோயபல்ஸ் பாணிப் பரப்புரைகள் ஜே.வி.பியினரால் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.

உண்மையில், இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் சிக்கல் தான் என்ன? அதன் ஊற்றுவாய் எது? தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் குடியாண்மை முறைக்குட்பட்டு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிட இயலுமா? இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் பொருண்மியச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கான அக, புறச் சூழல்கள் உண்டா? ஒவ்வொருவரினதும் கைக்குள் வளப்பட்டுக் கிடக்கும் தகவல் தொழினுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரை வெற்றியை வைத்துத் தாம் வழங்கிய உறுதிமொழிகளில் சிலவற்றையேனும் ஒரு அங்குலம் அளவிற்காவது அனுரகுமாரவினால் முன்னகர்த்திவிட இயலுமா? அனுரகுமாரவின் வருகையை மேற்குலகு எதிர்பார்த்து நின்றமைக்கு என்ன காரணம்? போன்ற வினாக்கட்கு விடையிறுக்கி நடப்பனவற்றை இன்னதுதானெனத் திட்டவட்டமாகத் தெரிந்து தெளிய வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகிவிட்டது.

நாடு எதிர்கொள்வது பொருண்மியச் சிக்கலே என்றளவில் சிக்கலின் மெய்நிலையைக் குறுக்கிப் பேசி, உண்மைநிலையை மூடிமறைக்கவே சிங்களதேசத்தின் அத்தனை முகங்களும் (அனுர, ரணில், சஜித், நாமல்) விரும்புகின்றன. உண்மையில் இலங்கையானது தோல்வியடைந்த நிலையை அடைந்துவிட்ட நாடாகும் (failed state). இனிமேலும் இலங்கை என்ற தோல்வியடைந்த நாட்டினைத் தொடர்ந்தும் இதேபோன்று பேணவியலாது என்ற கோணத்தில் இன்றிருக்கும் சிக்கலின் தன்மையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பிரித்தானியர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறியதோடு 76 ஆண்டுகளாகத் தொடரும் நவகாலனிய ஆட்சியில், இலங்கைத்தீவில் இரு தேசங்களின் நிலவுகையைக் கணக்கிலெடுக்காமல் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கீழ்க் கட்டமைக்கப்பட்ட ஒற்றையாட்சியின் விளைவால் எழுந்த ஒடுக்கும் சிங்களதேசத்திற்கும் ஒடுக்கப்படும் தமிழர்தேசத்திற்கும் இடையிலான முரண்பாடே இற்றைவரை இலங்கைத்தீவின் முதன்மை முரண்பாடாகும்.

இந்த முரண்பாட்டினைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்பில் தமிழர்தேசமானது மேற்கொண்ட வேறெந்த ஏற்பாடுகளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதத்தின் முன்பும், நரபலிவெறியாட்டத்தின் முன்பும், சூழ்ச்சிகளின் முன்பும் பயனற்றுப்போகவே, தமிழர்தேச அரசு (Tamil Nation State) அமைப்பதே இலங்கைத்தீவில் தமிழர்தேசம் உளதாயிருக்க ஒரேவழி எனத் தமிழர்தேசம் வரலாற்றின்வழி முடிவுசெய்து அதற்காக மறவழியிற் பாடாற்றியது.

சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தில் ஏறிய, ஏறத்துடித்த, ஏறுங் கனவிலே காலங்கழித்த என அனைத்துத் தரப்புகளும் தமிழினவழிப்பு மூலம் தமிழர்தேசத்தை அழித்தொழிப்பதில் பங்காளராகவிருந்தனர்; இனியும் இருப்பர். மறவழியிற் தமிழீழத் தனியரசு அமைக்கும் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒப்பற்ற உயிரீகங்களாலும், தமது ஆற்றல் வளங்களையும் விஞ்சிய மக்களின் பக்களிப்பாலும் வரலாற்றின்வழி தமிழீழ மக்கள் இராணுவமாக வளர்ந்து, தமிழீழ தேச அரசு அமைக்கும் தறுவாயில் நின்றபோதே, போர்க்கருவிகள் வழங்கல், உளவுபார்த்துக் கொடுத்தல், தொழினுட்ப உதவிகளை வழங்கல், போர்ப்பயிற்சி வழங்கல், திட்டமிடல் உதவிகள் என பலவித உதவிகளையும், வழிகாட்டல்களையும், ஒத்துழைப்புகளையும் உலக வல்லாண்மையாளர்கள் இனவழிப்புச் சிங்கள அரசிற்கு வழங்கியதோடு தமிழினவழிப்பை முன்னெடுக்கும்போது இயல்பாக எழக்கூடிய நெருக்கடிகளைப் பன்னாட்டளவிற் சமாளித்தல் மற்றும் சிங்கள அரச பயங்கரவாதத்தினை முன்னெடுக்க உவப்பான சூழலைப் பன்னாட்டளவில் ஏற்படுத்தல் என அத்தனை வழிகளிலும் தம்மாலியன்ற அத்தனை உதவிகளையும் தமிழினவழிப்பை மேற்கொள்ளும் ஒடுக்கும் சிறிலங்கா அரசிற்கு வழங்கின. இதனால், தமிழர்கள் மீது முழு அளவிலான இனவழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசானது கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்தது.

தமிழினவழிப்புப் போரின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகட்கான ஒப்பந்தங்கள், போரின் பின்பான வணிக முதலீடுகள், குத்தகைகள் எனத் தமது வணிக மற்றும் மேலாண்மை நலன்கட்கான பல்வேறு பங்குபிரிப்புகளை வாக்குறுதிகளாகப் பெற்றே உலக நாடுகள் சிறிலங்கா அரசிற்கு இவ்வளவு உதவிகளையும் வாரி வழங்கின. கடன்களை வாரி வழங்கியதன் மூலமும், போர்க்கருவிகளை அள்ளி இறைத்ததன் மூலமும், போரிற்கான செலவுகளைப் போட்டி போட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலமும் உலக நாடுகள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழினவழிப்புப் போரிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கின.

தம்மால் வெற்றிகொள்ள முடியாத தமிழர்தேசத்தின் மீது தமிழினவழிப்புப் போரை நடத்துவதற்குச் சிறிலங்கா பட்ட கடன்களும் கொடுத்த வாக்குறுதிகளுமே சிறிலங்காவினைத் தோல்வியடைந்த அரசாக (failed state) மாற்றியது என்பதை மூடிமறைக்கக் கட்டமைப்பு மாற்றக் கதையளப்புகளைச் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர். சிறிலங்கா என்ற ஒற்றையாட்சி நாடானது இனிமேலும் இயங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்பதையும், இதிலிருந்து மீள அது இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை முயற்சிகளும் இன்னமும் சிறிலங்காவை மக்கள் வாழவியலாத நாடாக மாற்றிக்கொண்டேயிருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்ளும் நேர்மைத்திடம் சிங்களதேச ஆட்சியாளர்கட்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழினவழிப்புப் போரைத் தங்குதடையின்றி முன்னெடுக்க வாங்கிய கடன்கள், அதற்கான வட்டிகள் என்பனவற்றோடு போர்வெற்றிக் களிப்பில் சிங்கள மக்களால் மகாவம்சத்தின் துட்டகெமுனுவாகத் தரநிலை பெற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவரது ஊரிலும் பேரிலும் ஆடிய கூத்துகளாலும் (விளையாட்டரங்கு, துறைமுகம், வானூர்தி நிலையம், மொட்டு வடிவில் கோபுரம்) சிறிலங்காவின் பொருண்மியம் நிலைகுலைந்தது மட்டுமன்றி சிறிலங்காவானது தோல்வியடைந்த நாடு (failed state) என்ற நிலையை நோக்கி நகர்ந்தது. போரின் பின்பாக நிறைவேற்றுவதாக உலக வல்லாண்மையாளர்கட்குக் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகளை மகிந்த ராஜபக்ச இந்தியாவின் அணைவோடும் சீனாவின் கடன்களோடும் சல்லாபித்தவாறு நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்தபோது, ஐ.நா உசாவல்கள் மற்றும் ஆட்சிமாற்ற மீட்சி என்பனவற்றிற் தமிழர்களை நம்பிக்கைகொள்ளுமாறு பகடைக்காய்களாக்ககித் தமக்குவப்பான மைத்திரி- ரணில் ஆட்சியை மேற்குலகு அமைத்துக் கொண்டது. தமிழினவழிப்புப் படுகொலையை மேற்கொள்வதற்காக‌ இணைந்து செயற்பட்ட காலத்தில் மகிந்த, பசில், கோத்தாபய ராஜபக்சக்களிற்கும் இந்தியாவிற்குமிடையில் பெரிதளவில் வெளிப்படுத்தப்படாத மிகவும் ஒட்டான உறவு இருந்தது. இனவழிப்புப் பங்காளிகள் என்ற அடிப்படையில் இந்த உறவு காலங்கடந்தும் தொடர வேண்டிய தேவை இரு தரப்பிற்கும் உண்டு.

இதனைப் பட்டெறியுமாறே “இந்தியாவின் போரையே நாங்கள் செய்தோம்” என மகிந்த ராஜபக்ச பலமுறை ஊடகங்கட்குச் சொல்லியிருக்க, கோத்தாபயவும் அதற்கு வலுச்சேர்க்குமாறு தனது கருத்துகளை செவ்விகளினூடாக வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் என்ற சூழ்ச்சித் திட்டத்தினை இந்தியா பின்னணியில் நின்று அரங்கேற்றியதன் மூலமாகத் தாம் பாதுகாப்பு அச்சுறுத்தலில் வாழ்வதான அச்சத்தைச் சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்தி, அத்தகைய பாதுகாப்புச் சிக்கலிலிருந்து தம்மை விடுவிக்க வல்லானாகக் கோத்தாபயவினைச் சிங்கள மக்கள் மனங்கொள்ளுமாறான சூழலை ஏற்படுத்தியே கோத்தாபய 2019 இல் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். எனவே தான் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய உசாவல்களைத் தொடர்ந்தால் இந்தியா அம்பலப்பட்டுப்போக வாய்ப்பிருப்பதால், இத்தகைய உசாவல்கள் நேர்வழி செல்கையில் அதற்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவும் இதனைத் தொடர்புபடுத்தி இந்திய உளவுத்துறையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியிட்ட கருத்தை நாம் நகைப்புடன் கடந்து செல்லவியலாது.

கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபோது சிறிலங்காவானது மேலும் ஒரு இறைமையுள்ள நாடாக இயங்கும் நிலையில் இருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டளவில் 30% ஆக இருந்த ஏற்றுமதிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது (Export to GDP) 2019 இல் 10% ஆகப் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது. அரச வருவாயில் 70% இற்கும் மேற்பட்ட பணமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்க‌ளிற்கு வட்டி செலுத்துவதற்கு மட்டுமே செலவாகியது. கோத்தாபயவின் ஆட்சியில் கொரோனாப் பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளாவிய பொருண்மிய நெருக்கடியானது சிறிலங்காவின் பொருண்மியத்தை அதள பாதாளத்திற்குத் தள்ளியது. நாட்டிற்குள் டொலர்களைக் கொண்டு வரும் வழிமுறைகளான தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதிகள் பாரிய முடக்கத்தை எதிர்கொண்டன; சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததால் உல்லாச விடுதி அடங்கலான அதனுடன் தொடர்புபட்ட துறைகள் முற்றாக முடங்கின; வரி வருமானத்தைக் கூட டொலர்களாக மாற்றும் வழியில்லாமல் சிறிலங்கா தடுமாறியது. கடன்களிற்கு வட்டியைச் செலுத்துவதற்கும், இறக்குமதியில் தங்கியிருக்கும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் நாட்டில் சிறு கையிருப்பாகவிருந்த டொலர்களும் செலவாகின.

எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வதற்குக் கூட டொலர்கள் இல்லாத நெருக்கடியான நிலையில் சிறிலங்கா முக்கித் திணறியது. இதனால், இயன்றவரை இறக்குமதியைக் குறைக்க வேண்டிய நிலைக்குக் கோத்தாபய அரசாங்கம் தள்ளப்பட்டது. வேளாண்மைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்திகள் தவிர்த்து வேறெதையுமே இறக்குமதிக்கு மாற்றீடாக உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திச் செய்ய முடியாத நிலையிலிருந்த கோத்தாபய அரசாங்கமானது, வேளாண்மைக்கான உரங்களையும் கிருமிகொல்லிகளையும் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து அவற்றை உள்ளூரில் உற்பத்தி செய்ய முனைந்தது.

அதாவது, டொலர்ப் பற்றாக்குறைக்கு உள்ளூர்த் தீர்வை (home grown solution) நாடி எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு அழகுச் சாயம் பூசுவதற்காகச் சுற்றுச்சூழலிற்குக் கேடில்லாமல், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யும் முனைப்பினாலான நடவடிக்கையாக அத்தகைய முடிவைக் காட்ட முயன்றார் கோத்தாபய. ஆனால், திடீரென உரங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுப் பயிர்கள் நலிந்தன; பட்டுப்போகின; விளைச்சல் பாரிய சரிவிற்கு உள்ளானது; இதனால் உழவர்கள் அங்கங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்; ஏழ்மையில் உழன்றனர். எனவே, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களிற்குப் போடப்பட்ட இறக்குமதித் தடையை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தளர்த்த வேண்டிய நிலைக்குக் கோத்தாபய தள்ளப்பட்டார்.

எந்தவொரு முறையான திட்டமிடலுமின்றி டொலர் பற்றாக்குறையை மறைக்கச் சுற்றுச்சூழற் கதையளந்து கொண்டுவரப்பட்ட இந்த உர இறக்குமதிக்கான தடையால் வேளாண்மையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் விளைவாக, 2021- 2022 காலப்பகுதியில் நாட்டின் 50% அரிசித் தேவையை நிறைவுசெய்ய 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி நெருக்கடியான நிலைக்குக் கோத்தாபய தள்ளப்பட்டார்.


இதனால், இருப்பிலிருந்த சிறுதொகை டொலர்களும் செலவாகிக் கொண்டிருந்தன. அத்துடன், மேற்குலக நாடுகளின் உலகளாவிய நிதிநிலை மதிப்பிட்டு நிறுவனங்களின் அறிவுறுத்தல்களைச் செவிமடுக்காத சிங்கள மக்களின் மீட்பனாகத் தன்னைத்தானே நினைத்துக்கொண்ட கோத்தாபய வரிக்குறைப்புகளைச் செய்தார். இதனால், வேறு வருவாய் வழிகள் நின்றுபோன நேரத்தில் வரிவருவாயும் குறைந்தது. இதனால் International Sovereign Credit Rating Agencies ஆனவை சிறிலங்காவானது பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (International Sovereign Bonds) விற்றுக் கடன்பெற முடியாதவாறு சிறிலங்கா தொடர்பான தமது நிதிமதிப்பீட்டினைக் கீழிறக்கின. விளைவாக, பன்னாட்டு மூலதனச் சந்தையில் சிறிலங்காவின் ISB இன் முகப்பெறுமதியானது பிணையின் பெறுதியில் 40% ஆகியது. இதனால், கூடிய வட்டிக்கேனும் ISB இனை விற்றுக் கடன்பெறும் வாய்ப்பும் சிறிலங்காவிற்கு நழுவிப்போனது. கோத்தாபய ஆட்சியில் ஏறியபோது 7.6 பில்லியன் அமெரிக்க டொலராகவிருந்த மொத்த அந்நியச் செலாவணிக் கையிருப்பானது (Gross Foreign Exchange Reserves) 2021- 2022 காலப்பகுதியில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது.

இந்தத் தொகையானது நாட்டின் இன்றியமையாப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் தொகையினை விடக் குறைவானதாகும். இதனாலேதான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழர்தேசத்தைத் தாம் போரில் வெற்றிகொண்டதை உலகிற்குப் பேரறிவிப்புச் செய்த சிறிலங்காவானது, 2022.04.12 அன்று தான் பொருண்மிய அடிப்படையில் இயங்கவியலாத நாடாகவும், பட்ட கடன்களையோ அல்லது அதற்கான வட்டியைத் தன்னுமோ திரும்பச் செலுத்தவியலாத நாடாகவும் மாறிவிட்டதை உலகிற்கு வெட்கமில்லாமல் அறிவித்தது. அதன் பின்னர் சிறிலங்கா உடனடியாக பன்னாட்டு நாணய நிதியத்தினை (IMF) 2022.04.16 அன்று நாடித் தமது நாட்டை இயங்க முடியாத நிலையிலிருந்து பொருண்மிய அடிப்படையில் தம்மை மீட்டு உதவுமாறு வேண்டிக் கொண்டது. ஆனாலும், IMF இன் முன்னீடுகட்கு (நிபந்தனைகட்கு) கோத்தாபய பெரிதளவில் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையிலே தான் “அரகலய” போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. “அரகலய” உண்மையில் உழைக்கும் பாட்டாளிச் சிங்கள மக்களின் போராட்ட எழுச்சியாக அமையவில்லை. மின்வெட்டு நேரத்தில் காற்றுவாங்கக் கூடும் ஒரு ஒன்றுகூடலாகவே “அரகலய” போராட்டம் காலிமுகத்திடலில் தொடங்கியது. இது நாடு முழுவதும் மக்கள் அங்கங்கு திரண்டு போராடிய மக்கள் போராட்டமாக அமையாமல், நடுத்தர மற்றும் உயர் நடுத்தரக் கொழும்புவாழ் மக்களின் ஒன்றுகூடலாகவே “அரகலய” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோத்தாபய மேற்குலகிற்கு உவப்பாகச் செயற்படவில்லையென்பதால் சினமடைந்த மேற்குலக நாடுகள் தமது தூதரகங்கள் மூலம் “அரகலய” போராட்டத்திற்குத் தம்மாலான உதவிகளை வழங்கி இந்தப் போராட்டத்தைப் பின்னின்று இயக்கின.

கோத்தாபயவினை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காக அவுத்திரேலியாவில் வசிக்கும் குமார் குணரட்ணத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியினர் (Frontline Socialist Party) களமிறக்கப்பட்டுப் போராட்டம் தீவிரமாக்கப்பட்டது. மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டுக் கோத்தாபய வெளியேறும் வரை வேடிக்கை பார்க்கப்பட்ட “அரகலய” போராட்டத்தை அரச எந்திரத்தின் படைவலுவைப் பயன்படுத்தி ஒடுக்கும் சூழல் கோத்தாபயவிற்கு இருக்கவில்லை. இவ்வாறாக, அமைப்பு மாற்றம் வேண்டி நிற்பதாகக் கூறி முன்னெடுக்கப்பட்ட “அரகலய” போராட்டமானது மேற்குலகிற்கு உவப்பான ரணிலைக் குடியரசுத் தலைவராக நியமிப்பதில் வந்து முற்றுப்பெற்றது.

அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் 2022.07.20 அன்று குடியரசுத் தலைவராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 2022.07.31 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி உதவி (Extended Fund Facility) என்ற திட்டத்தின் கீழாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்திற்கு (staff level agreement) வந்தடைந்தார். பன்னாட்டு நாணய நிதியத்திடம் (IMF) கடன்வாங்க 2022.07.31 அன்று ரணில் விக்கிரமசிங்க எல்லா விதத்திலும் ஒத்துழைப்பது என்ற நிலைக்கு அணியமாகி IMF இனை அணுகியிருந்தும் “துரித கடன்” என்ற அடிப்படையிற் கோரப்பட்ட இந்தக் கடனின் முதற் தவணை பணத்தைப் பெறவே ஓராண்டு காலம் ஆகியது.

பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடன்பெற வேண்டுமெனில், ஏலவே செலுத்தப்படாதிருந்த 40 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் கடன் மறுசீரமைப்புச் (debt restructuring) செய்ய வேண்டிய நிலையில் சிறிலங்காவும் பன்னாட்டு நாணய நிதியமும் இருந்தன. சிறிலங்காவிற்குக் கடன்களை வழங்கிய இந்தியா, ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகள் IMF இன் ஏற்பாடுகளையேற்றுக் கடன்சீரமைப்பிற்கு உடனடி ஒப்புதலை அளித்தாலும், Paris Club உறுப்புநாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் வல்லாண்மைப் போட்டியால் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (China Exim Bank- 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியிருந்தது) மற்றும் சீன வளர்ச்சி வங்கி (China Development Bank- 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களை வழங்கியிருந்தது) ஆகியன கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைக்காமையால் சிறிலங்காவானது பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து பெற முயன்ற உடனடிக் கடனைக் கூட உடனடியாகப் பெற இயலவில்லை. ஈற்றில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது கடன்மறுசீரமைப்பிற்கு நீண்ட இழுத்தடிப்புகளின் பின்னர் உடன்பட்டதால் சிறிலங்காவிற்கு EFF (Extended Fund Facility) அடிப்படையிலான கடனை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுத்தது.


பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளும் முன்னீடுகளாக (நிபந்தனைகளாக) கட்டமைப்பைச் சரிசெய்தல் (Structural Adjustments), சிக்கன நடவடிக்கைகள் (Austerity Measures) என்ற போர்வையில் IMF வற்புறுத்தும் மாற்றங்கள் அத்தனையையும் மேற்கொள்ளும் அடித்தளத்தை ரணில் தான் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் மேற்கொண்டு விட்டார். 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த EFF அடிப்படையிலான IMF இன் கடன் வழங்கற் திட்டமானது 2023 – 2027 வரையான 4 ஆண்டுகள் காலப்பகுதியில் பகுதி பகுதியாகவே சிறிலங்காவிற்கு வழங்கப்படும்.

அதில், 330 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக சிறிலங்கா பெற்றுக்கொண்டு விட்டது. சிறிலங்காவானது IMF இற்குக் கொடுத்த கட்டமைப்பு மாற்றம் தொடர்பிலான வாக்குறுதிகளை எந்தளவிற்கு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்தே மீதிக் கடன் தொகையானது தவணை அடிப்படையில் சிறிலங்காவிற்குக் கொடுத்து முடிக்கப்படும். அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான EFF மூலமாக சிறிலங்கா அடையவிருக்கும் அடைவென்பது, 2027 இல் IMF ஆனது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை முழுமையாக சிறிலங்காவிற்கு வழங்கி முடிக்கும்போது, பன்னாட்டு மூலதனச் சந்தையில் தனது ISB (International Sovereign Bond) களை விற்றுக் கடன்பெறும் தகுதியைச் சிறிலங்கா அடைந்துவிடல் என்பதாகும். அதாவது 2027 ஆம் ஆண்டளவில் சிறிலங்காவைப் பன்னாட்டளவில் கடன்பெறத் தகுதியாக்குதலே இந்த 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான EFF இன் நோக்கமென பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) சிறிலங்காவிற்கான நடவடிக்கைகட்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்சார மானியங்களை நிறுத்தல், வரியை இரட்டிப்பாக்கல், தொலைத்தொடர்புச் சட்டம் (Telecommunication Act) மற்றும் மின்சாரச் சட்டம் (Electricity Act) ஆகியவற்றிற் திருத்தங்களை மேற்கொள்ளல், ஓய்வூதிய நிறுத்தம் மற்றும் குறைப்பு என இன்னும் வெளிப்படையாக நடைமுறைக்கு வராத பலவற்றை நடைமுறைப்படுத்துவதாக IMF இற்கு ஒப்புதலளித்தே வெறும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியின் ஒரு பகுதியைச் சிறிலங்கா பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அனுரவே நிறைவேற்ற வேண்டியிருக்கும். உண்மையில், பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து நாடுகள் கடன்பெற வேண்டுமாயின், கடன்கோரும் நாடுகளானவை தாம் அத்தகைய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகப் படிப்படியான பல கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். கல்வி, மருத்துவம், நீர்வழங்கல் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாகத் தனியார்மயப்படுத்துமாறும், மக்கட்கான மானியங்களையும் செலவுகளையும் குறைக்குமாறுமே தம்மிடம் கடன்கோரி வரும் நாடுகளைப் பன்னாட்டு நாணய நிதியமானது (IMF) முதற்கட்டமாக வற்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கட்டற்ற முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய நலன்கட்கு இசைவான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்றவற்றினை உள்வாங்கி, அதற்கேற்பக் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து, வெறும் நுகர்வுச் சந்தையாகவும், வளங்களைத் தங்குதடையின்றிச் சுரண்டவிடும் வளக்கொள்ளையர்களின் அடிவருடிகளாகவும் முதலாளித்துவ உற்பத்திக்கான மலிவான தொழிலாளர் சந்தையாகவும் (Cheap Labour Market) இருக்க உடன்படும் குறைந்த நடுத்தர வருவாயுள்ள நாடுகட்கே பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன கடன்களை வழங்குகின்றன.

IMF வேண்டி நிற்கும் இத்தகைய கட்டமைப்பு மாற்றங்களினால் அதிகரிக்கும் வரிச்சுமையாலும், வாழ்க்கைச் சுமையாலும் இவ்வாறு கடன்பெறும் நாடுகளிலுள்ள மக்கள் சகிப்பின் எல்லையைக் கடந்து தெருவிற்கு வந்து போராடுவார்கள். மக்களின் வெறுப்புணர்வாலும், ஒத்துழையாமையாலும், போராட்டங்களாலும் நாடு இயங்க முடியாத நிலை உருவாகும். இதனால், IMF இனால் வழங்கப்படும் கடன்களையும் அதற்கான வட்டியையும் மீளப்பெறுவதில் IMF இற்குப் பாரிய சிக்கல்கள் உருவாக்கும் என்பதை IMFஆனது பட்டறிந்து வைத்திருக்கிறது. இப்படியாக IMF இற்குக் கசப்பான படிப்பினைகள் இந்தோனேசியா, சிம்பாவே, கிரீஸ், உக்ரேன் போன்ற பல நாடுகளில் வரலாற்றில் நிகழ்ந்தேறியிருந்தாலும், அண்மைய படிப்பினையாக ஆர்ஜென்ரீனாவில் நடந்தேறியவை, நடந்தேறுகின்றவை அமைகின்றன.

கடன்களைச் செலுத்தும் ஆற்றல்களைத்தான் இழந்துவிட்டதாகவும், பொருண்மிய அடிப்படையில் முழுமையாக முடங்கிவிட்டதாகவும் உலகிற்குத் தனது வங்குரோத்துநிலையை (Bankruptcy) அறிவித்த ஆர்ஜென்ரீனாவானது 2018 ஆம் ஆண்டில் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெற்றுக்கொண்டது. தொடக்கத்தில் நாடு பொருண்மிய நெருக்கடியிலிருந்து மீளுவதாகத் தோற்றமளித்தாலும் (ரணிலின் கடந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் போல) நாளடைவில் ஆர்ஜென்ரீனாவானது தாம் வாழவியலாத நாடாக மாறிவிட்டதை அந்நாட்டு மக்கள் உணரலாயினர். சுமக்க முடியாத வாழ்வியற் சிக்கல்களை மக்கள் சுமக்கத் தலைப்பட்டனர்; சகிப்பின் எல்லையை மக்கள் கடந்தனர்; பணவீக்கம் பருத்தது; மக்கட்கு அரசு செய்த செலவுகளும், வழங்கிய மானியங்களும் மிக மிகக் குறைக்கப்பட்டது; வரிச்சுமை ஆர்முடுகியது. இதனால் மக்கள் தெருவிற்கு வந்தனர்; போராட்டங்களில் ஈடுபட்டனர்; எங்கும் கூச்சல்களும் குழப்பங்களும் ஆர்ஜென்ரீனாவெங்கும் நீடிக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள் தாம் இந்த IMF கடனால் ஆர்ஜென்ரீனா மீளும் என்பதிலோ அல்லது தாம் வழங்கிய கடனை ஆர்ஜென்ரீனா மீளச் செலுத்தும் என்பதிலோ நம்பிக்கையற்றவராக இருப்பதை வெளிப்படுத்துமாறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

எனவே, ஆர்ஜென்ரீனாவிலிருந்து பெற்ற அண்மைக்காலப் பட்டறிவின் அடிப்படையில் சிறிலங்காவிலும் அத்தகைய போராட்டங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உறுதியாக உண்டு என்று மேற்குலகத் தூதரகங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. தமக்குவப்பான ரணிலின் ஆட்சி தொடர்ந்தால், வாழ்க்கைச் சுமையால் வதையுறப்போகும் மக்களின் வெறுப்புணர்வுகள் மேலிட்டு வெடிக்கும் அத்தகைய போராட்டங்களை ஜே.வி.பி மற்றும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த முன்னணி சோசலிசக் கட்சி போன்ற அமைப்புகள் மக்களைத் திரட்டி முன்னெடுப்பார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் மேற்குலகானது, ஜே.வி.பி போன்ற தரப்புகட்கு ஆட்சிக் கட்டிலில் ஏறுவதில் இருக்கும் தீரா வேட்கையைப் பயன்படுத்தி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட்டால், அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது அவர்களை வைத்தே சிறிலங்காவானது மேற்குலகின் மூலதனச் சந்தையில் முழுதாகத் தங்கியிருக்குமாறான கட்டமைப்பு மாற்றங்களை நிகழ்த்தினால் (ஏற்கனவே, அதற்கான ஒப்புதல்கள் ஜே.வி.பி இனால் வழங்கப்பட்டு விட்டன) வெளியில் போராட்டங்களும் கூச்சல்களும் குழப்பங்களும் ஏற்படாது என்ற முடிவிற்கு வந்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, “அரகலய” போராட்டத்தினை முன்னெடுப்பதில் மேற்குலகிற்குப் பயன்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியானது (FSP) ஆட்சிக்கு வரும் அளவிற்குக் கட்டமைப்பு வலு இல்லாமல் இருப்பதால், ஒட்டுமொத்த “அரகலய” எழுச்சியும் (so-called) JVP இனுடைய வெற்றி என்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துமாறான பரப்புரைகட்கு மேற்குலகின் தூதரகங்கள் துணைநின்றன. அதனால், நாட்டில் தொடருகின்ற பொருண்மியச் சிக்கல்களைத் தீர்க்க ஒரு புதிய வரவாக, ஒளிரும் விண்மீனாக, JVP முதன்மைப்படுத்தப்பட்டது.

மேற்குலகத் தூதரக அதிகாரிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாதிருந்த JVP இனரை தாம் அழைத்துச் சந்திக்காமல், JVP இன் தலைமை அலுவலகம் சென்று சந்திப்புகளை நடத்தி JVP இன் வருகை மீது மக்கள் நம்பிக்கைகொள்ளுமாறு ஊடகவெளிச்சம் பாய்ச்சப்பட்டது.  கனடா, இலண்டன் என JVP இன் உயர்மட்டக் குழு பயணம் செய்தது. JVP இனது வருகையானது உறுதிப்படுத்தப்பட்டதொன்று என்பது போல ஊடகங்களும் கருத்துக்கணிப்பு நடுவங்களும் பரப்புரை செய்தன.

IMF இன் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரி பீட்டர் பிறீவன் தலைமையிலான உயர்மட்டக் குழுவானது 2024.03.14 அன்று கொழும்பிலுள்ள Sangri La விடுதியில் விஜித கேரத், பேராசிரியர் அணில் ஜெயந்த, பேராசிரியர் சீத பண்டார, முனைவர் கர்ச சூரியப்பெரும மற்றும் கந்துன்நெத்தி ஆகியோர் அடங்கிய‌ JVP இன் உயர்மட்டக் குழுவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பில் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) கடன்பெறுவதற்கான முன்னீடுகளாக (நிபந்தனைகளாக) ரணில் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் மறுப்பின்றி JVP ஆட்சிக்கு வர நேர்ந்தால் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அத்தகையை வாக்குறுதிகளை வழங்குமாறும் ஜே.வி.பி யிடம் கேட்கப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்காக எத்தகைய சொல்லத்தரமற்ற செயல்களிலும் ஈடுபட அணியமாகவிருக்கும் ஜே.வி.பியானது உடன்வந்து அத்தகைய அத்தனை உறுதிமொழிகளையும் வழங்கியது.  

எனினும், JVP போன்ற இடதுசாரிய அமைப்பை மேற்குலக நாடுகள் எங்ஙனம் நம்புகின்றன? எப்படி ஏற்றுக் கொண்டன? எப்படி இணைந்து பயணிக்க அணியமாகவிருக்கின்றன? அது வாய்ப்பில்லாத விடயமாயிற்றே! உலகவங்கி, IMF போன்ற நிதி அமைப்புகள் கடன்வழங்கும் போது கடன்கோரும் நாடானது பொதுவுடைமைக் கொள்கைகட்கு எதிரானதாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தானே கடன் வழங்கிப் பழக்கப்பட்டவர்கள்? உலக வங்கி நிறுவப்பட்டு சிறிது காலமேயாகியிருந்த 1947 ஆம் ஆண்டு பிரான்ஸ் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கியிடம் கடனாகக் கேட்டபோது, அப்போதைய பிரான்ஸ் அரசாங்கத்தில் பிரான்ஸ் பொதுவுடைமைக் கட்சியும் கூட்டணிக் கட்சியாக இருப்பதைக் காரணங்காட்டிப் பிரான்சிற்குக் கடன் மறுக்கப்பட்டதோடு, கூட்டணியிலிருந்து பொதுவுடைமைக் கட்சி வெளியேற்றப்பட்ட பின்பே உலக வங்கி பிரான்சிற்குக் கடன் வழங்கியது. இப்படியாக, இடதுசாரிய பொதுவுடைமைக் கொள்கைகட்கு எதிரான ஆட்சியுள்ள நாடுகட்கு மட்டுமே கடன்வழங்க முன்வரும் IMF போன்ற நிதிமூலதன அமைப்புகள் JVP இன் ஆட்சியை எப்படி வரவேற்கின்றன? JVP ஆட்சியில் எப்படிக் கடன்வழங்கலைத் தொடர முன்வருகின்றன? அப்படியென்றால், ஜே.வி.பியினர் இடதுசாரியப் பொதுவுடைமைக் கட்சியினர் இல்லையா?

உண்மையில் JVP இடதுசாரிக் கட்சியா? இல்லையா?

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான நா.சண்முகதாசனைத் தலைமையேற்று அவருடன் நெருங்கிப் பழகி, கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்திய ரோகண விஜயவீர நா.சண்முகதாசன் மூலமாக வடகொரியா, சீனா, இந்தோனேசியா என உலகலாவிய புரட்சிகரத் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு உட்கட்சி விவாதங்கள் ஏதுமின்றி தமிழரான நா.சண்முகதாசனிற்கு எதிராகத் தனக்கென ஒரு குழுவை உருவாக்கியதோடு, ரொட்ஸ்கிய எதிர்ப்புரட்சிக் கருத்தியலிற்கும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பெயர்போன கெனமனுடன் கூட்டுச் சேர்ந்து 1966 இல் கெனமன் தலைமையில் பேரினவாத நோக்குடன் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியதோடு நா.சண்முகதாசன் தலைமைதாங்கி நடத்திய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினுடைய‌ (பீஜிங் பிரிவு) வளங்களைப் பயன்படுத்தி அந்த ஊர்வலத்திற்குத் திருட்டுத்தனமாகத் துண்டறிக்கை அச்சிட்டு, கட்சியின் ஒழுக்கநெறிகளை மீறி இரண்டகமிழைத்ததால் ரோகண விஜயவீரவை கட்சியிலிருந்து நா.சண்முகதாசன் அவர்களால் இடைநீக்கப்பட்டார். இவ்வாறாக, சிங்கள பேரினவாத சிந்தனை என்பது ரோகண விஜயவீரவிடம் 1960 களிலேயே வெளிப்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளரை முன்னணிப் போர்ப்படையாகக் கருதி மலையக மக்களின் தொழிலுரிமைப் போராட்டங்களில் கூடிய அக்கறை செலுத்திப் போராடிய நா.சண்முகதாசனிற்கு இனவாதச் சாயம் பூசுவதிலும் முனைப்புடன் இருந்த ரோகண விஜயவீர 1965 யில் ஜே.வி.பியினை நிறுவினார்.   1971 இல் ஜே.வி.யினர் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளவிருந்த முதலாவது புரட்சியும் வர்க்கபோராட்டமாக இல்லாமல் சாதியக் காழ்ப்புப் போராட்டமாகவே திரிபிற்கு உள்ளாகியிருந்தது. பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றும் அரச அதிகாரத்தைப் புரட்சிகரப் போராட்டத்தினாற் கைப்பற்றினால் மட்டுமே புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்த முடியுமென்றும் முழங்கி வந்த ரோகண விஜேயவீர 1982 இல் தேர்தற் பாதையில் பயணித்துத் தாமும் பாராளுமன்றத்தில் ஒரு பன்றியாக அமர முயற்சி செய்து அதிலும் தோல்வி கண்டார்.


பின்னர் 1987- 1989 காலப்பகுதியில் ஜே.வி.யினரது இரண்டாவது எழுச்சியென்பது தாம் 1970 களில் மேற்கொள்ளவிருந்ததாகக் கூறிக்கொண்ட வர்க்கப் போராட்டத்தினைக் கைவிட்டு முற்றுமுழுதான தீவிர சிங்கள தேசியக் கட்சியாக ஜே.வி.பி தன்னை மாற்றிக் கொண்டது. தமிழர்களின் தாயகநிலத்தைக் கூறுபோடுவதன் மூலம் தமிழர்தேசத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக வடக்கு – கிழக்கைப் பிரிக்க வழக்குத் தாக்கல் செய்தமை, புலிகளுடனான அமைதிப்பேச்சுக்களைத் தொடராமல் முழு அளவிளான போர் தொடங்கப்படும் என்று உறுதியளிப்பவர்களுக்கே தமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கு வாழ்த்துத் தெரிவிக்க அமெரிக்கத் தூதரகம் சென்றமை (தமிழர்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியத்துடனும் உறவாடுவோம் என்ற கொள்கையையுடைய அரிய வகை இடதுசாரிகள்), தமிழினவழிப்புப் போரின் பரப்புரைப் படையாகச் செயற்பட்டமை, மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கக் கைக்கூலிகள் என்று சிங்கள மக்களிடத்தில் கருத்தேற்றம் செய்தமை, இலங்கைத்தீவில் இனச்சிக்கல் என்ற ஒன்றிருப்பதாக எந்நிலைவரினும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்தல் என ஜே.வி.பியின் கடந்தகால வெறித்தனமான சிங்கள பேரினவாத நிலைப்பாட்டை பழையதெனவும் காலம் மாறிவிட்டது என்றும் தமிழர்கள் தப்புக் கணக்குப்போட்டால், வரலாறு மீளவும் பழைய பாடங்களைத் தமிழர்கட்குப் புகட்டும் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

ரோகண விஜயவீர, உபதிஸ்ச கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற ஜே.வி.யின் தலைவர்கள் கொல்லப்பட உயிருடன் எஞ்சிய ஒரே தலைவரான சோமவன்ச அமரசிங்க என்பவர் இந்திய உளவுத்துறையான “ரோ” வினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரான்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்திய எதிர்ப்புப் பேசிய சோமவன்ச இந்திய உளவுத்துறையுடன் சல்லாபித்து தனது உயிரைக் காப்பாற்றி ஜே.வி.யின் நாலாவது தலைவராகத் தலைமையேற்றார். பின் சந்திரிக்காவுடன் சல்லாபித்து, அவருடன் கூட்டணி சேர்ந்து 3 அமைச்சர்களுடன் 39 நாடாளுமன்ற இருக்கைகளைப் பிடித்துக்கொண்டனர். சுனாமி ஆழிப்பேரலைப் பேரிடரில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீண்டெழுவதற்காக மாந்தநேயக் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்ட சுனாமி மனிதாபிமான செயற்பாட்டு வரைபிற்கெதிராக‌ப் பேரினவெறிப் பரப்புரை செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவர இடமளிக்காமற் தடுத்தது ஜே.வி.பியினரே என்பதைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். “சிங்கள – தமிழ் கலைக்கூடல்” என்ற பெயரில் 2003 ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் ஒக்டோபர் மாத இறுதியில் 2 நாள்கள் நடந்த இன நல்லிணக்க ஒன்றுகூடலின் போது நிகழ்விடத்திற்குள் புகுந்து கூடியிருந்தவர்களைத் தாக்கிய இருநூறிற்கும் கூடுதலான சிங்கள பேரினவெறிக் காடையர்களிற்கு சோமவன்ச வழிவந்த ஜே.வி.யினரே தலைமை தாங்கினர் என்பதையும் நாம் இவ்விடம் நினைவூட்ட விழைகின்றோம். மேலும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) என்ற பெயரில் இயங்கிய ஜே.வி.யின் துணை அமைப்பானது 2005 இனை குடியேற்றவாத எதிர்ப்பாண்டாக அறிவித்ததோடு “பௌத்த இராட்சியத்தை அழித்துவிட்டு கிறித்தவ தமிழீழத்தை நிறுவவே பன்னாட்டுச் சமூகம் வேலை செய்கின்றது” என்று மேடைகளில் முழங்கிச் சிங்கள இனவாதத்தை பீறிட்டெழச் செய்தனர். “கிறித்தவ தமிழீழம்” போன்ற அப்பட்டமான இனவெறிக் கூச்சலானது இந்தியாவைப் பிடித்தாட்டும் பாசிசப் பேயான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்துவ பாசிச அமைப்புகளின் கூச்சல்களை விடவும் இழிவாக இருந்தது.

கொள்கை நிலைப்பாடுகளில் தகிடுதத்தியாகவும் சிங்கள இனவெறியில் ஊறியவராகவும் ரோகண விஜேயவீர இருந்தாலும் தன்னுயிரை ஈகம் செய்வதில் பின்நிற்கும் கோழையாக அவர் இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், சோமவன்ச அமரசிங்க தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எத்தகைய சொல்லத்தரம‌ற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடிய பேடி என்பதை நாம் இங்கு கோடிட்டுக் கூற வேண்டியிருக்கிறது. இந்த சோமவன்சவின் வழிநடத்தலில் மீளுயிர் பெற்ற ஜே.வி.பி யினரே இன்றைய ஜே.வி.பி யினர் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். சோமவன்ச அமரசிங்கவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அவரின் வழியில் பயணத்தை மாற்றிக்கொண்ட ஒருவரே இன்றைய குடியரசுத் தலைவரான அனுரகுமார திசாநாயக்க என்பதை நாம் ஐயந்திரிபறத் தெரிந்துகொள்ள‌ வேண்டும். வெவ்வேறு வரலாற்றுக் கட்டத்தில் மார்க்சியத்தை மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்போர் வளர்த்தெடுத்து வந்தனர். எனவே, இந்த ஐந்து மார்க்சிய மூலவர்களையும் அவர்களது சிந்தைகளையும் ஏற்றுக்கொள்ளாத எவரும் மார்க்சியர்களே அல்ல.

உண்மையில், அனுரகுமார தலைமையிலான இன்றைய ஜே.வி.யினர் இடதுசாரிகளும் அல்ல; மார்க்சியர்களும் அல்ல; பொதுவுடைமைவாதிகளும் அல்ல. அவர்கள் மார்க்சிய வேடமணிந்து ஊரை ஏமாற்றும் வேடதாரிகள்.

இயற்பியலறிவைச் (Physics) சமூகத்தைப் புரிந்துகொள்ளும் படியாக விரிவாக்கிச் சமூக அறிவியலுக்கு வலுவான அடித்தளமிட்ட மார்க்சிய அறிவியலையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியற் கண்ணோட்டத்தில் மாந்தகுல வரலாற்றைப் புரிந்துகொண்ட மார்க்சினதும் ஏங்கல்சினதும் கருத்துகளையும் உள்வாங்கியதோடு, மார்க்சியப் பொருளியலைச் சரிவரப் புரிந்துகொண்டு அதனை வெறுமனே வர்க்கப் பார்வைக்குள் மட்டுமே குறுக்கிவிடாது சமூக அறிவியலை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்றவர்கள் லெனின், ஸ்ராலின் மற்றும் மாவோ சேதுங் ஆகியோர்களே. தேசங்களின் தன்னாட்சியுரிமை (Self-determination) பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்த லெனினும் அதனை மேலும் திறம்பட வரையறுத்துத் தேசங்கள் தேச அரசமைக்கும் (Nation State) வரலாற்றின் போக்கினைத் தெளிவுற மனங்கொண்ட ஸ்ராலினும், ஸ்ராலினின் மறைவின் பின்னர் திரிபுவாதிகளிடமிருந்து மார்க்சிய அரசியலைக் காப்பாற்றிய மாவோவும் இன்று மார்க்சியத்தின் பெயரால் எதிர்ப்புரட்சிகரக் கருத்தியல்களை விதைக்கும் JVP போன்ற‌ கருத்தியல் அரம்பர்களினால் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

எனவே, இந்த மார்க்சிய மூலவர்களில் ஒருவரையேனும் மறுத்து மார்க்சியம் பேசுபவர்கள் மார்க்சியரே அல்ல என்றும் அவர்கள் மார்க்சின் பெயரால் மார்க்சியத்தை அழிக்கும் திரிபுவாத அணியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நாம் தெரிந்து தெளிய வேண்டும்.  ராஜினி திரணகமவை நெஞ்சில் சுமந்து திரிபவரும் தன்னை முற்போக்காளராக அடையாளங்காட்டுபவருமான‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் 1914 இல் லெனின் கூறியவை இன்றைய காலத்திற்குப் பொருந்தாதவை என்று லெனினை மறுத்துப் பேசித் தான் மார்க்சின் பெயரால் சுற்றுத்திரியும் மார்க்சியத்திற்கு எதிரான திரிபுவாதப் புரட்டன் என அம்பலப்பட்டு நிற்கின்றார். நவ காலனியச் சமூக அமைப்பில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஒரு தேசமானது தேச அரசமைக்கும் வரலாற்றின்வழியே தான் வரலாற்றில் முன்னகர இயலுமென்று கூறுவதே மார்க்சியம். அப்படியெனின், தமிழீழதேசம் தமிழீழதேச அரசமைக்கும் வரலாற்றுப் பயணத்திற் புரட்சிகரமாகப் பங்கெடுக்க வேண்டியதே மார்க்சியர்களின் கடமை என்பதை ஐயந்திரிபற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். JVP போன்ற ஒரே நாட்டு முழக்கமிடுபவர்கள் மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் புரட்டர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பின்னவீனத்துவம், நவ மார்க்சியம் போன்ற போர்வைகளில் நடமாடும் இத்தகைய பல்கலைக்கழக விரிவுரையார்கள் விழலுரையாளர்களே என்பதுடன் அவர்கள் மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தையும் தமிழ்த்தேசியம் போன்ற புரட்சிகரக் கருத்தியல்களையும் அழித்தொழிப்பதற்காக அலைந்து திரியும் அழுக்கர்கள் என்பதையும் மக்கள் மனங்கொள்ள வேண்டும். அனுரகுமாரவும் அவரது கும்பலும் அத்தகையோரே என்பதிலும் தமிழர்கள் தெளிவுபெற வேண்டும்.

இவர்கள் மார்க்சியர்களா? இல்லையா என்ற குழப்பம் இன்னமும் நீடித்தால், கருத்தியற்தெளிவு பெறாத எம்மக்கட்குப் புரியும் படி நாம் இன்னமும் எளிதாகத் தெளிவுபடுத்த‌ விழைகிறோம். அதாவது தமிழ்த்தேசியத்தின் பேரால் இந்துத்துவ அரம்பர்களின் அடியாளாகச் சுற்றுத் திரியும் இந்தியாவின் அடிவருடிகளான மறவன்புலவு சச்சிதானந்தன் போன்ற தமிழர்களைக் குழுப்பிரித்துத் தமிழ்த்தேசிய இனத்தை வலுக்குன்றச் செய்வோர் எப்படித் தமிழ்த்தேசியர்கள் அல்லவோ; இன்னும் சொல்லப்போனால் புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் இந்தியாவின் வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இத்தகைய வகையறாக்கள் எங்ஙனம் தமிழ்த்தேசியத்தின் பேரில் சுற்றித்திரிகிறார்களோ அவ்வாறே தான் மார்க்சியத்தின் பேரில் JVP போன்ற மார்க்சியத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சிகர அரம்பர்கள் ஆடித்திரிகிறார்கள்.



ஜே.வி.பியினரின் இந்தியப் பயணம்

இவ்வாறாக, போலி மார்க்சியர்களும், ஆட்சியில் அமருவதற்காக சொல்லத் தரமற்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அணியமாக இருப்பவர்களும், மார்க்சின் பேரில் எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களைப் பரப்பி மார்க்சையும் மார்க்சிச மூலவர்களையும் பலமுறை கொடூரமாகக் கொன்றவர்களுமான‌ ஜே.வி.பியினரை ஆட்சிக்குக் கொண்டு வருவதென மேற்குலகானது சென்ற ஆண்டே முடிவுசெய்து விட்டது. இந்தப் பின்னணியிலேயே, வேறுவழியின்றி, வரலாற்றில் முதன் முறையாக JVPயினரின் பேராளர் முழுவானது (delegation) 5 நாள் சுற்றுப் பயணத்திற்கு டெல்கியினால் அழைக்கப்பட்டது. புகழ்வாய்ந்த தமது 5 அரசியல் வகுப்புகளில் முதன்மையான இடம் வகித்திருந்த இந்திய விரிவாக்கம் (Indian Expansionism) பற்றிய வகுப்புகளின் மூலம் இந்தியாவை எதிர்ப்பதாகத் தோற்றங்காட்டிய மக்கள் விடுதலை முன்னணியானது (JVP) தனது இரண்டாவது கிளர்ச்சியை இந்திய எதிர்ப்புவாதத்திலிருந்தே வெளிக்கிளம்ப வைத்தமை யாவரும் அறிந்ததே. அப்படியிருக்க, ஜே.வி.பி தொடங்கப்பட்டுச் சற்றொப்ப 60 ஆண்டுகளாகும் நிலையில் வரலாற்றில் முதன்முறையாக டெல்கிக்கு அழைக்கப்பட்டு இந்தியாவின் வெளி அலுவல்கள் அமைச்சரான ஜெய்சங்கருடனும், இந்திய அதிகார வர்க்கத்தினருடனும் சந்திப்புகள் நடைபெற்றன. அத்துடன் ஒருபடி மேற்சென்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவாலுடனும் அனுரகுமார தலைமையிலான குழு சந்திப்பை மேற்கொண்டது. அத்துடன் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தாய்நிலமான குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட JVP யினர் அங்குள்ள முதலீட்டாளர்களுடன் கைகுலுக்கும் நிகழ்வுகளானவை ஜே.வி.பியினரின் 5 நாள் இந்தியப் பயணத்தில் நடந்தேறின. ஆட்சியதிகாரத்தை அடைவதற்கு எந்த நிலைக்கும் போகக் கூடிய ஜே.வி.யினரின் அன்றைய இந்திய எதிர்ப்பு முழக்கங்களில் கூட உண்மையில்லை என்பதை இந்தியா நன்குணரும். அத்துடன், சிறிலங்காவானது பொருளியற் சிக்கலிற்குள் மீண்டெழ இயலாதவாறு சிக்குண்டிருந்தபோது 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இறைத்துத் தான் போட்டுக் கொண்ட மேலாண்மை அடித்தளத்திலிருந்து இனிவரும் எந்த சிறிலங்காவின் ஆட்சியாளர்களாலும் காலெடுக்க முடியாது என்று உறுதியாக நம்பும் இந்தியாவானது வழமைக்கு மாறான முதன்மையை ஜே.வி.பியின் இந்த 5 நாள் இந்தியப் பயணத்திற்கு வழங்கியிருந்தது. ஆட்சியதிகாரத்தை அடையவும் தன்முனைப்பைக் காட்டவும் வாய்ப்புள்ள சொல்லத்தரமற்ற வழிகளைக் கூட ஜே.வி.யினர் பயன்படுத்துவர் என்பதை வரலாற்றில் நடந்தேறிய நிகழ்வுகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.

இன்றைய நிலைவரம்

எது எப்படியோ, சோமவன்ச அமரசிங்க என்ற பேடியின் வழியில் புதிய பயணத்தைத் தொடங்கிய ஜே.வி.யின் தலைவரும் சோமவன்சவின் வழி நின்ற திரிபுவாதியுமான அனுரகுமார திசாநாயக்க குடியரசுத் தலைவராகிவிட்டார். இன்றைய நிலைவரப்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைச் சேர்த்து 83 பில்லியன் அமெரிக்க டொலரிற்கு மேற்பட்ட கடனை சிறிலங்கா செலுத்த வேண்டியிருகின்றது. கடன்மறுசீரமைப்பு உடன்படிக்கைகட்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடன் செலுத்தலை அனுர ஆட்சியில் சிறிலங்கா மீண்டும் தொடர வேண்டியுள்ளது. அதில் மிகக் கூடுதலான வட்டிவீதத்தில் ISB மூலமாகப் பெற்ற 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன்களும் அடங்குகின்றது என்பதையும் அதற்கு வட்டி செலுத்தியே சிறிலங்காவின் மக்கள் அனுரகுமாரவின் ஆட்சியிற் பாடாய்ப்படப் போகின்றார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 40 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய உள்நாட்டுக் கடன்களால் ஓய்வூதியம் மற்றும் ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை நிதியம் என்பன பாதிப்பிற்குள்ளாகப் போகின்றது. தற்போதைய நிலைவரப்படி கடனிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது (debt to GDP) அண்ணளவாக 100.56% ஆகிவிட்டது.

இப்படியாகச் சிறிலங்கா என்ற ஓட்டைக் கப்பலிற்கு ஓட்டியாக அனுரகுமார எனும் அலப்பறை வந்திருக்கிறார். கட்டமைப்பு மாற்றத்தைச் செய்யப்போவதாகக் கதையளந்தவர் IMF வேண்டுகின்ற கட்டமைப்பு மாற்றத்தை, அதாவது நம்பி வாக்களித்த மக்கட்கு ஏமாற்றத்தைத்தான் அனுரகுமார செய்யப்போகின்றார். அவரால் ரணிலிற்கும் மேற்குலகிற்கும் உவப்பாகவிருந்த மத்திய வங்கியின் ஆளுநரைக் கூட மாற்ற இயலவில்லை. ரணிலால் நியமிக்கப்பட்ட‌ நிதி அமைச்சின் செயலரைக் கூட அனுரகுமாரவால் மாற்ற முடியவில்லை. நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கிறதென்றும் அதனைத் தீர்த்துச் சிங்கள பௌத்த நாட்டைக் காப்பாற்ற‌ கோத்தாபய தான் சரியான தெரிவு என்றும் நினைத்துக் கோத்தாபயவை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதே சிங்கள மக்கள் தான் தற்போது தாம் எதிர்கொள்ளும் பொருண்மியச் சிக்கலைத் தீர்க்க அனுரகுமாரவே சரியான தெரிவு என நினைத்துத் தேர்வு செய்திருக்கிறார்கள். அந்தத் தெரிவு போலவே இந்தத் தெரிவும் சிங்கள மக்கட்கு ஏமாற்றத்தையே அளிக்கப்போகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவதற்காகப் பரப்புரை நோக்கிலேயே அனுரகுமார நகர்வதாகத் தெரிகிறது. வரிக்குறைப்புத் தொடர்பான அவரது அறிவிப்பானது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரைக்குமே நடைமுறையில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல.





அதேவேளை, தம‌து கோயாபல்ஸ் பரப்புரையை ஜே.வி.யினர் ஆரம்பித்துள்ளனர். ரணிலிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொய்புனைவுகள் சமூக வலைத்தளங்களிற் பரப்பப்பட்டன. அதனை மறுத்த சிறிலங்கா பொலீசார், 163 பொலீசாரும் சிறப்பு அதிரடிப் படையும் ரணிலிற்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும், பாதுகாப்பு நீக்கப்பட்டது/ குறைக்கப்பட்டது எனப் பரவிய செய்திகள் பொய்யானவை என அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதாகப் பரவிய செய்தியிலும் உண்மையில்லை; தற்போதைய ஆட்சிக்கு அஞ்சி நாட்டைவிட்டுத் தப்பியோடுவோரைத் தடுப்பதற்காக ஒரு பட்டியல் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் காத்திருப்பதாகப் பரவிய செய்திகளிலும் உண்மையில்லை; முன்னாள் வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அம்மையார் நாட்டை விட்டுத் தப்பியோட எடுத்த முயற்சி தடுக்கப்பட்டதாகப் பரவிய செய்தியிலும் உண்மையில்லை; ஊழல் செய்தோர் தொடர்பான கோப்புகளுடன் தேர்தல் பரப்புரை நேரங்களில் அலைந்து திரிவதாகக் கூறிய அனுர அத்தகைய கோப்புகள் குறித்து வாயே திறப்பதாகவில்லை; உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல் தொடர்பான உசாவல்கள் குறித்து அனுரகுமார மூச்சுவிடுவதாகக் கூடத் தெரியவில்லை; கோத்தாபயவின் விருப்பின்படி அமைந்த புலனாய்வு நிறுவனங்கள் (Intelligence Establishments) ஒரு சில பதவி மாற்றங்கள் கூட நடைபெறாமல் அப்படியே இயங்குகின்றன‌; ராஜபக்ச குடும்பத்தினைக் கூண்டில் அடைக்கப்போவதாகக் கூறிய கதைகள் காற்றோடு போய்விட்டன‌. எருமை வாங்கும் முன்பே நெய்யிற்கு விலை கூறும் ஜே.வி.பியினர் இப்போது எருமையைக் கையில் வைத்துக்கொண்டு பாலிற்கே விலை கூற மறுக்கின்றார்கள். பொய்யையும் வஞ்சகத்தையும் மட்டுமே தமது அரசியற் பண்பாடாகக் கொண்ட சோமவன்ச அமரசிங்க வழியில் வந்த இன்றைய ஜே.வி.பி அரம்பர்கள் முழுமையாக அம்பலப்பட்டுப் போகும் காலம் தொலைவில் இல்லை என்பதை நாம் அடித்துக் கூறுகின்றோம்.

எம் தமிழ்மக்களே!

எம் தமிழ்மக்களே! ஏன் இந்தத் தடுமாற்றம்? சந்திரிக்கா வந்தபோதும் இப்படியொரு தடுமாற்றத்திற்கு ஆளானீர்களே???? வரலாற்றிலிருந்து அடிப்படையான பாடங்களைக் கூட இனவழிப்பின் பின்பும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? சிறிலங்காவின் ஆட்சிக் கட்டிலில் கௌதம புத்தரே அமர்ந்தாலும் அவர் மகாவம்சம் சித்தரிக்கின்ற துட்டகெமுனுவாகவே ஆட்சிசெய்வார் என்பதைக் கூட நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? அனுரகுமார போன்ற ஒரு புரட்டன் இன்னும் சில மாதங்களில் உங்களிடம் அம்பலப்பட்டு விடுவார். இளையோரே! உங்கட்கு ஒன்று தெரியுமா? அரசியற் பண்பாடு பற்றிப் பேசும் ஜே.வி.யினரின் சமூக நடத்தைகள் யாதென நீங்கள் அறிவீர்களா? அவர்களின் மாணவர் அமைப்பான சோசலிச மாணவர் ஒன்றியக் (Socialist Students Union) கூடுகைகளானவை கஞ்சா போன்ற போதைப்பழக்கங்கட்கும் பாலியற் சீர்கேடுகட்கும் பேர் போனவை என்பதை நீங்கள் அறிவீர்களா? ஜே.வி.பியினரில் பலர்  போதைப் பயன்பாடு தொடர்பான குருதிமாதிரி ஆய்வுகட்கு (intoxication test) உட்படுத்தப்பட்டால் அவர்களின் அரசியற் பண்பாட்டையும் சமூகப் பண்பாட்டையும் நீங்கள் நன்கு அறிந்துகொள்வீர்கள்.

இப்போது தேசிய இனச்சிக்கல் என்பது இலங்கைத்தீவின் முதன்மைச் சிக்கல் அல்ல‌ என்றவாறு ஜே.வி.யினர் கதையளப்பதோடு “எல்லோரும் சிறிலங்கன்” என்ற அடிப்படையில் ஒன்றிணையுமாறு அவர்கள் அழைப்பது உண்மையில் எல்லோரையும் சிங்கள பௌத்தத்தை ஏற்று நடக்குமாறான அழைப்புத்தான் என்பதை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டு அலைந்த இன்றைய ஜே.வி.பியினர் இப்போது பேசுவது இனநல்லிணக்கமன்று; அது கட்டாய ஓர்மைப்படுத்தல் (Forced Assimilation). அவர்கள் ஏற்படுத்த முனையும் சிறிலங்கன் என்ற அடையாளஞ் சுமக்கும் பண்பாட்டு ஓர்மைப்படுத்தல் (Cultural Assimilation) என்பது பண்பாட்டு இனவழிப்பின் ஒரு வடிவமாகும் என்பதையும், அத்தகைய பண்பாட்டு இனவழிப்பென்பது இனவழிப்பின் தொடர்ச்சியே என்பதையும் எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவின் முதன்மை முரண்பாடான தமிழர்களின் தேசிய இனச்சிக்கல் என்பது தீர்க்கப்படாதபோது, அது எப்படி முரண்பாடாகவே இல்லாமல் போனது? எம் தமிழர்களே! உங்கட்கு இன்னும் புரியவில்லையா? தமிழினவழிப்பைத் தான் ஜே.வி.பியினர் தேசிய இனச்சிக்கல்கட்கான தீர்வாகக் கொண்டிருந்தார்கள் என்பது உங்கட்கு இன்னும் புரியவில்லையா? சிங்களதேசத்தின் ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு தமது மொழியுரிமையைக் கூட முறையாகப் பயன்படுத்தவியலாமல், தமது பகுதிகளிலே தமது ஆளுமையை நிலைநாட்டவியலாமல், தமது முன்னோர்களின் அறிவுமரபையும் பண்பாட்டு வளர்ச்சிகளையும் தொடர்ந்து பேண முடியாமல் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகச் சிறுத்துக்கொண்டே வரும் தமிழர்தேசமானது தனது அரசியற் கட்டுறுதியைப் பேணமுடியாமலும் தமிழ்த்தேசத்தின் வரலாற்று இருப்பைப் பேணவியலாமலும் சிதைந்தழிய வேண்டுமென்ற சூழ்ச்சியை மனங்கொண்ட இந்தச் சிங்கள வெறியர்கள் எமது தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசாமல் சிறிலங்கனாகப் பண்பாட்டு ஓர்மைப்படுத்தலிற்குள்ளாகி அழிந்துபோகுமாறு அழைக்கிறார்கள். 

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை எம் மனத்தில் நிறுத்தி எமது தேசவிடுதலை நோக்கிய அடுத்த பாய்ச்சலிற்கு நாம் அணியமாக வேண்டாமா?

நன்றி- kaakam.com

ஜே.வி.பியின் வருகைக்குக் காரணமான அரசியலும் ஜே.வி.யின் ஆட்சியில் நடந்தேறப்போகும் நாற்றங்களும். இலங்கைத்தீவானது தற்போது எதிர்கொள்வது பொருண்மிய நெருக்கடியென்றும், அதனைத் தீர்த்து வைக்கப்போகும் மீட்பராக அனுரகுமார திசாநாயக்க வரலாற்றிற் பதிவாகப் போகின்றார் என்றும் அலப்பறைகள் விண்ணதிர முழங்குகின்றன. நாட்டில் 76 ஆண்டுகளாகத் தொடர்ந்த தவறான அரசியற் பண்பாடும், பொருண்மியப் பண்பாடுமே இன்றைய இந்த அவலநிலைக்குக் காரணமாகின என்றும், அத்தகைய நீண்ட நெடிய சிக்கலை ஒரு அமைப்பு மாற்றத்தின் மூலமாக மாற்றியமைக்க வந்திருக்கும் புரட்சிக்காரர் அனுரகுமார என்றும் மக்களை நம்பவைப்பதற்கான கோயபல்ஸ் பாணிப் பரப்புரைகள் ஜே.வி.பியினரால் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.உண்மையில், இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் சிக்கல் தான் என்ன அதன் ஊற்றுவாய் எது தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் குடியாண்மை முறைக்குட்பட்டு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிட இயலுமா இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் பொருண்மியச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கான அக, புறச் சூழல்கள் உண்டா ஒவ்வொருவரினதும் கைக்குள் வளப்பட்டுக் கிடக்கும் தகவல் தொழினுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரை வெற்றியை வைத்துத் தாம் வழங்கிய உறுதிமொழிகளில் சிலவற்றையேனும் ஒரு அங்குலம் அளவிற்காவது அனுரகுமாரவினால் முன்னகர்த்திவிட இயலுமா அனுரகுமாரவின் வருகையை மேற்குலகு எதிர்பார்த்து நின்றமைக்கு என்ன காரணம் போன்ற வினாக்கட்கு விடையிறுக்கி நடப்பனவற்றை இன்னதுதானெனத் திட்டவட்டமாகத் தெரிந்து தெளிய வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகிவிட்டது.நாடு எதிர்கொள்வது பொருண்மியச் சிக்கலே என்றளவில் சிக்கலின் மெய்நிலையைக் குறுக்கிப் பேசி, உண்மைநிலையை மூடிமறைக்கவே சிங்களதேசத்தின் அத்தனை முகங்களும் (அனுர, ரணில், சஜித், நாமல்) விரும்புகின்றன. உண்மையில் இலங்கையானது தோல்வியடைந்த நிலையை அடைந்துவிட்ட நாடாகும் (failed state). இனிமேலும் இலங்கை என்ற தோல்வியடைந்த நாட்டினைத் தொடர்ந்தும் இதேபோன்று பேணவியலாது என்ற கோணத்தில் இன்றிருக்கும் சிக்கலின் தன்மையை மதிப்பீடு செய்ய வேண்டும். பிரித்தானியர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறியதோடு 76 ஆண்டுகளாகத் தொடரும் நவகாலனிய ஆட்சியில், இலங்கைத்தீவில் இரு தேசங்களின் நிலவுகையைக் கணக்கிலெடுக்காமல் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கீழ்க் கட்டமைக்கப்பட்ட ஒற்றையாட்சியின் விளைவால் எழுந்த ஒடுக்கும் சிங்களதேசத்திற்கும் ஒடுக்கப்படும் தமிழர்தேசத்திற்கும் இடையிலான முரண்பாடே இற்றைவரை இலங்கைத்தீவின் முதன்மை முரண்பாடாகும். இந்த முரண்பாட்டினைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்பில் தமிழர்தேசமானது மேற்கொண்ட வேறெந்த ஏற்பாடுகளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதத்தின் முன்பும், நரபலிவெறியாட்டத்தின் முன்பும், சூழ்ச்சிகளின் முன்பும் பயனற்றுப்போகவே, தமிழர்தேச அரசு (Tamil Nation State) அமைப்பதே இலங்கைத்தீவில் தமிழர்தேசம் உளதாயிருக்க ஒரேவழி எனத் தமிழர்தேசம் வரலாற்றின்வழி முடிவுசெய்து அதற்காக மறவழியிற் பாடாற்றியது.சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தில் ஏறிய, ஏறத்துடித்த, ஏறுங் கனவிலே காலங்கழித்த என அனைத்துத் தரப்புகளும் தமிழினவழிப்பு மூலம் தமிழர்தேசத்தை அழித்தொழிப்பதில் பங்காளராகவிருந்தனர்; இனியும் இருப்பர். மறவழியிற் தமிழீழத் தனியரசு அமைக்கும் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒப்பற்ற உயிரீகங்களாலும், தமது ஆற்றல் வளங்களையும் விஞ்சிய மக்களின் பக்களிப்பாலும் வரலாற்றின்வழி தமிழீழ மக்கள் இராணுவமாக வளர்ந்து, தமிழீழ தேச அரசு அமைக்கும் தறுவாயில் நின்றபோதே, போர்க்கருவிகள் வழங்கல், உளவுபார்த்துக் கொடுத்தல், தொழினுட்ப உதவிகளை வழங்கல், போர்ப்பயிற்சி வழங்கல், திட்டமிடல் உதவிகள் என பலவித உதவிகளையும், வழிகாட்டல்களையும், ஒத்துழைப்புகளையும் உலக வல்லாண்மையாளர்கள் இனவழிப்புச் சிங்கள அரசிற்கு வழங்கியதோடு தமிழினவழிப்பை முன்னெடுக்கும்போது இயல்பாக எழக்கூடிய நெருக்கடிகளைப் பன்னாட்டளவிற் சமாளித்தல் மற்றும் சிங்கள அரச பயங்கரவாதத்தினை முன்னெடுக்க உவப்பான சூழலைப் பன்னாட்டளவில் ஏற்படுத்தல் என அத்தனை வழிகளிலும் தம்மாலியன்ற அத்தனை உதவிகளையும் தமிழினவழிப்பை மேற்கொள்ளும் ஒடுக்கும் சிறிலங்கா அரசிற்கு வழங்கின. இதனால், தமிழர்கள் மீது முழு அளவிலான இனவழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசானது கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்தது.தமிழினவழிப்புப் போரின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகட்கான ஒப்பந்தங்கள், போரின் பின்பான வணிக முதலீடுகள், குத்தகைகள் எனத் தமது வணிக மற்றும் மேலாண்மை நலன்கட்கான பல்வேறு பங்குபிரிப்புகளை வாக்குறுதிகளாகப் பெற்றே உலக நாடுகள் சிறிலங்கா அரசிற்கு இவ்வளவு உதவிகளையும் வாரி வழங்கின. கடன்களை வாரி வழங்கியதன் மூலமும், போர்க்கருவிகளை அள்ளி இறைத்ததன் மூலமும், போரிற்கான செலவுகளைப் போட்டி போட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலமும் உலக நாடுகள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழினவழிப்புப் போரிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கின. தம்மால் வெற்றிகொள்ள முடியாத தமிழர்தேசத்தின் மீது தமிழினவழிப்புப் போரை நடத்துவதற்குச் சிறிலங்கா பட்ட கடன்களும் கொடுத்த வாக்குறுதிகளுமே சிறிலங்காவினைத் தோல்வியடைந்த அரசாக (failed state) மாற்றியது என்பதை மூடிமறைக்கக் கட்டமைப்பு மாற்றக் கதையளப்புகளைச் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர். சிறிலங்கா என்ற ஒற்றையாட்சி நாடானது இனிமேலும் இயங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்பதையும், இதிலிருந்து மீள அது இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை முயற்சிகளும் இன்னமும் சிறிலங்காவை மக்கள் வாழவியலாத நாடாக மாற்றிக்கொண்டேயிருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்ளும் நேர்மைத்திடம் சிங்களதேச ஆட்சியாளர்கட்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழினவழிப்புப் போரைத் தங்குதடையின்றி முன்னெடுக்க வாங்கிய கடன்கள், அதற்கான வட்டிகள் என்பனவற்றோடு போர்வெற்றிக் களிப்பில் சிங்கள மக்களால் மகாவம்சத்தின் துட்டகெமுனுவாகத் தரநிலை பெற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவரது ஊரிலும் பேரிலும் ஆடிய கூத்துகளாலும் (விளையாட்டரங்கு, துறைமுகம், வானூர்தி நிலையம், மொட்டு வடிவில் கோபுரம்) சிறிலங்காவின் பொருண்மியம் நிலைகுலைந்தது மட்டுமன்றி சிறிலங்காவானது தோல்வியடைந்த நாடு (failed state) என்ற நிலையை நோக்கி நகர்ந்தது. போரின் பின்பாக நிறைவேற்றுவதாக உலக வல்லாண்மையாளர்கட்குக் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகளை மகிந்த ராஜபக்ச இந்தியாவின் அணைவோடும் சீனாவின் கடன்களோடும் சல்லாபித்தவாறு நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்தபோது, ஐ.நா உசாவல்கள் மற்றும் ஆட்சிமாற்ற மீட்சி என்பனவற்றிற் தமிழர்களை நம்பிக்கைகொள்ளுமாறு பகடைக்காய்களாக்ககித் தமக்குவப்பான மைத்திரி- ரணில் ஆட்சியை மேற்குலகு அமைத்துக் கொண்டது. தமிழினவழிப்புப் படுகொலையை மேற்கொள்வதற்காக‌ இணைந்து செயற்பட்ட காலத்தில் மகிந்த, பசில், கோத்தாபய ராஜபக்சக்களிற்கும் இந்தியாவிற்குமிடையில் பெரிதளவில் வெளிப்படுத்தப்படாத மிகவும் ஒட்டான உறவு இருந்தது. இனவழிப்புப் பங்காளிகள் என்ற அடிப்படையில் இந்த உறவு காலங்கடந்தும் தொடர வேண்டிய தேவை இரு தரப்பிற்கும் உண்டு. இதனைப் பட்டெறியுமாறே “இந்தியாவின் போரையே நாங்கள் செய்தோம்” என மகிந்த ராஜபக்ச பலமுறை ஊடகங்கட்குச் சொல்லியிருக்க, கோத்தாபயவும் அதற்கு வலுச்சேர்க்குமாறு தனது கருத்துகளை செவ்விகளினூடாக வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் என்ற சூழ்ச்சித் திட்டத்தினை இந்தியா பின்னணியில் நின்று அரங்கேற்றியதன் மூலமாகத் தாம் பாதுகாப்பு அச்சுறுத்தலில் வாழ்வதான அச்சத்தைச் சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்தி, அத்தகைய பாதுகாப்புச் சிக்கலிலிருந்து தம்மை விடுவிக்க வல்லானாகக் கோத்தாபயவினைச் சிங்கள மக்கள் மனங்கொள்ளுமாறான சூழலை ஏற்படுத்தியே கோத்தாபய 2019 இல் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். எனவே தான் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய உசாவல்களைத் தொடர்ந்தால் இந்தியா அம்பலப்பட்டுப்போக வாய்ப்பிருப்பதால், இத்தகைய உசாவல்கள் நேர்வழி செல்கையில் அதற்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவும் இதனைத் தொடர்புபடுத்தி இந்திய உளவுத்துறையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியிட்ட கருத்தை நாம் நகைப்புடன் கடந்து செல்லவியலாது.கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபோது சிறிலங்காவானது மேலும் ஒரு இறைமையுள்ள நாடாக இயங்கும் நிலையில் இருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டளவில் 30% ஆக இருந்த ஏற்றுமதிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது (Export to GDP) 2019 இல் 10% ஆகப் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது. அரச வருவாயில் 70% இற்கும் மேற்பட்ட பணமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்க‌ளிற்கு வட்டி செலுத்துவதற்கு மட்டுமே செலவாகியது. கோத்தாபயவின் ஆட்சியில் கொரோனாப் பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளாவிய பொருண்மிய நெருக்கடியானது சிறிலங்காவின் பொருண்மியத்தை அதள பாதாளத்திற்குத் தள்ளியது. நாட்டிற்குள் டொலர்களைக் கொண்டு வரும் வழிமுறைகளான தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதிகள் பாரிய முடக்கத்தை எதிர்கொண்டன; சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததால் உல்லாச விடுதி அடங்கலான அதனுடன் தொடர்புபட்ட துறைகள் முற்றாக முடங்கின; வரி வருமானத்தைக் கூட டொலர்களாக மாற்றும் வழியில்லாமல் சிறிலங்கா தடுமாறியது. கடன்களிற்கு வட்டியைச் செலுத்துவதற்கும், இறக்குமதியில் தங்கியிருக்கும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் நாட்டில் சிறு கையிருப்பாகவிருந்த டொலர்களும் செலவாகின. எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வதற்குக் கூட டொலர்கள் இல்லாத நெருக்கடியான நிலையில் சிறிலங்கா முக்கித் திணறியது. இதனால், இயன்றவரை இறக்குமதியைக் குறைக்க வேண்டிய நிலைக்குக் கோத்தாபய அரசாங்கம் தள்ளப்பட்டது. வேளாண்மைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்திகள் தவிர்த்து வேறெதையுமே இறக்குமதிக்கு மாற்றீடாக உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திச் செய்ய முடியாத நிலையிலிருந்த கோத்தாபய அரசாங்கமானது, வேளாண்மைக்கான உரங்களையும் கிருமிகொல்லிகளையும் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து அவற்றை உள்ளூரில் உற்பத்தி செய்ய முனைந்தது. அதாவது, டொலர்ப் பற்றாக்குறைக்கு உள்ளூர்த் தீர்வை (home grown solution) நாடி எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு அழகுச் சாயம் பூசுவதற்காகச் சுற்றுச்சூழலிற்குக் கேடில்லாமல், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யும் முனைப்பினாலான நடவடிக்கையாக அத்தகைய முடிவைக் காட்ட முயன்றார் கோத்தாபய. ஆனால், திடீரென உரங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுப் பயிர்கள் நலிந்தன; பட்டுப்போகின; விளைச்சல் பாரிய சரிவிற்கு உள்ளானது; இதனால் உழவர்கள் அங்கங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்; ஏழ்மையில் உழன்றனர். எனவே, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களிற்குப் போடப்பட்ட இறக்குமதித் தடையை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தளர்த்த வேண்டிய நிலைக்குக் கோத்தாபய தள்ளப்பட்டார். எந்தவொரு முறையான திட்டமிடலுமின்றி டொலர் பற்றாக்குறையை மறைக்கச் சுற்றுச்சூழற் கதையளந்து கொண்டுவரப்பட்ட இந்த உர இறக்குமதிக்கான தடையால் வேளாண்மையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் விளைவாக, 2021- 2022 காலப்பகுதியில் நாட்டின் 50% அரிசித் தேவையை நிறைவுசெய்ய 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி நெருக்கடியான நிலைக்குக் கோத்தாபய தள்ளப்பட்டார்.இதனால், இருப்பிலிருந்த சிறுதொகை டொலர்களும் செலவாகிக் கொண்டிருந்தன. அத்துடன், மேற்குலக நாடுகளின் உலகளாவிய நிதிநிலை மதிப்பிட்டு நிறுவனங்களின் அறிவுறுத்தல்களைச் செவிமடுக்காத சிங்கள மக்களின் மீட்பனாகத் தன்னைத்தானே நினைத்துக்கொண்ட கோத்தாபய வரிக்குறைப்புகளைச் செய்தார். இதனால், வேறு வருவாய் வழிகள் நின்றுபோன நேரத்தில் வரிவருவாயும் குறைந்தது. இதனால் International Sovereign Credit Rating Agencies ஆனவை சிறிலங்காவானது பன்னாட்டு மூலதனச் சந்தையில் பிணைகளை (International Sovereign Bonds) விற்றுக் கடன்பெற முடியாதவாறு சிறிலங்கா தொடர்பான தமது நிதிமதிப்பீட்டினைக் கீழிறக்கின. விளைவாக, பன்னாட்டு மூலதனச் சந்தையில் சிறிலங்காவின் ISB இன் முகப்பெறுமதியானது பிணையின் பெறுதியில் 40% ஆகியது. இதனால், கூடிய வட்டிக்கேனும் ISB இனை விற்றுக் கடன்பெறும் வாய்ப்பும் சிறிலங்காவிற்கு நழுவிப்போனது. கோத்தாபய ஆட்சியில் ஏறியபோது 7.6 பில்லியன் அமெரிக்க டொலராகவிருந்த மொத்த அந்நியச் செலாவணிக் கையிருப்பானது (Gross Foreign Exchange Reserves) 2021- 2022 காலப்பகுதியில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது.இந்தத் தொகையானது நாட்டின் இன்றியமையாப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் தொகையினை விடக் குறைவானதாகும். இதனாலேதான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழர்தேசத்தைத் தாம் போரில் வெற்றிகொண்டதை உலகிற்குப் பேரறிவிப்புச் செய்த சிறிலங்காவானது, 2022.04.12 அன்று தான் பொருண்மிய அடிப்படையில் இயங்கவியலாத நாடாகவும், பட்ட கடன்களையோ அல்லது அதற்கான வட்டியைத் தன்னுமோ திரும்பச் செலுத்தவியலாத நாடாகவும் மாறிவிட்டதை உலகிற்கு வெட்கமில்லாமல் அறிவித்தது. அதன் பின்னர் சிறிலங்கா உடனடியாக பன்னாட்டு நாணய நிதியத்தினை (IMF) 2022.04.16 அன்று நாடித் தமது நாட்டை இயங்க முடியாத நிலையிலிருந்து பொருண்மிய அடிப்படையில் தம்மை மீட்டு உதவுமாறு வேண்டிக் கொண்டது. ஆனாலும், IMF இன் முன்னீடுகட்கு (நிபந்தனைகட்கு) கோத்தாபய பெரிதளவில் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையிலே தான் “அரகலய” போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. “அரகலய” உண்மையில் உழைக்கும் பாட்டாளிச் சிங்கள மக்களின் போராட்ட எழுச்சியாக அமையவில்லை. மின்வெட்டு நேரத்தில் காற்றுவாங்கக் கூடும் ஒரு ஒன்றுகூடலாகவே “அரகலய” போராட்டம் காலிமுகத்திடலில் தொடங்கியது. இது நாடு முழுவதும் மக்கள் அங்கங்கு திரண்டு போராடிய மக்கள் போராட்டமாக அமையாமல், நடுத்தர மற்றும் உயர் நடுத்தரக் கொழும்புவாழ் மக்களின் ஒன்றுகூடலாகவே “அரகலய” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோத்தாபய மேற்குலகிற்கு உவப்பாகச் செயற்படவில்லையென்பதால் சினமடைந்த மேற்குலக நாடுகள் தமது தூதரகங்கள் மூலம் “அரகலய” போராட்டத்திற்குத் தம்மாலான உதவிகளை வழங்கி இந்தப் போராட்டத்தைப் பின்னின்று இயக்கின. கோத்தாபயவினை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காக அவுத்திரேலியாவில் வசிக்கும் குமார் குணரட்ணத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியினர் (Frontline Socialist Party) களமிறக்கப்பட்டுப் போராட்டம் தீவிரமாக்கப்பட்டது. மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டுக் கோத்தாபய வெளியேறும் வரை வேடிக்கை பார்க்கப்பட்ட “அரகலய” போராட்டத்தை அரச எந்திரத்தின் படைவலுவைப் பயன்படுத்தி ஒடுக்கும் சூழல் கோத்தாபயவிற்கு இருக்கவில்லை. இவ்வாறாக, அமைப்பு மாற்றம் வேண்டி நிற்பதாகக் கூறி முன்னெடுக்கப்பட்ட “அரகலய” போராட்டமானது மேற்குலகிற்கு உவப்பான ரணிலைக் குடியரசுத் தலைவராக நியமிப்பதில் வந்து முற்றுப்பெற்றது.அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் 2022.07.20 அன்று குடியரசுத் தலைவராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 2022.07.31 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி உதவி (Extended Fund Facility) என்ற திட்டத்தின் கீழாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்திற்கு (staff level agreement) வந்தடைந்தார். பன்னாட்டு நாணய நிதியத்திடம் (IMF) கடன்வாங்க 2022.07.31 அன்று ரணில் விக்கிரமசிங்க எல்லா விதத்திலும் ஒத்துழைப்பது என்ற நிலைக்கு அணியமாகி IMF இனை அணுகியிருந்தும் “துரித கடன்” என்ற அடிப்படையிற் கோரப்பட்ட இந்தக் கடனின் முதற் தவணை பணத்தைப் பெறவே ஓராண்டு காலம் ஆகியது. பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடன்பெற வேண்டுமெனில், ஏலவே செலுத்தப்படாதிருந்த 40 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் கடன் மறுசீரமைப்புச் (debt restructuring) செய்ய வேண்டிய நிலையில் சிறிலங்காவும் பன்னாட்டு நாணய நிதியமும் இருந்தன. சிறிலங்காவிற்குக் கடன்களை வழங்கிய இந்தியா, ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகள் IMF இன் ஏற்பாடுகளையேற்றுக் கடன்சீரமைப்பிற்கு உடனடி ஒப்புதலை அளித்தாலும், Paris Club உறுப்புநாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் வல்லாண்மைப் போட்டியால் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (China Exim Bank- 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியிருந்தது) மற்றும் சீன வளர்ச்சி வங்கி (China Development Bank- 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களை வழங்கியிருந்தது) ஆகியன கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைக்காமையால் சிறிலங்காவானது பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து பெற முயன்ற உடனடிக் கடனைக் கூட உடனடியாகப் பெற இயலவில்லை. ஈற்றில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது கடன்மறுசீரமைப்பிற்கு நீண்ட இழுத்தடிப்புகளின் பின்னர் உடன்பட்டதால் சிறிலங்காவிற்கு EFF (Extended Fund Facility) அடிப்படையிலான கடனை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுத்தது.பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளும் முன்னீடுகளாக (நிபந்தனைகளாக) கட்டமைப்பைச் சரிசெய்தல் (Structural Adjustments), சிக்கன நடவடிக்கைகள் (Austerity Measures) என்ற போர்வையில் IMF வற்புறுத்தும் மாற்றங்கள் அத்தனையையும் மேற்கொள்ளும் அடித்தளத்தை ரணில் தான் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் மேற்கொண்டு விட்டார். 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த EFF அடிப்படையிலான IMF இன் கடன் வழங்கற் திட்டமானது 2023 – 2027 வரையான 4 ஆண்டுகள் காலப்பகுதியில் பகுதி பகுதியாகவே சிறிலங்காவிற்கு வழங்கப்படும். அதில், 330 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக சிறிலங்கா பெற்றுக்கொண்டு விட்டது. சிறிலங்காவானது IMF இற்குக் கொடுத்த கட்டமைப்பு மாற்றம் தொடர்பிலான வாக்குறுதிகளை எந்தளவிற்கு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்தே மீதிக் கடன் தொகையானது தவணை அடிப்படையில் சிறிலங்காவிற்குக் கொடுத்து முடிக்கப்படும். அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான EFF மூலமாக சிறிலங்கா அடையவிருக்கும் அடைவென்பது, 2027 இல் IMF ஆனது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை முழுமையாக சிறிலங்காவிற்கு வழங்கி முடிக்கும்போது, பன்னாட்டு மூலதனச் சந்தையில் தனது ISB (International Sovereign Bond) களை விற்றுக் கடன்பெறும் தகுதியைச் சிறிலங்கா அடைந்துவிடல் என்பதாகும். அதாவது 2027 ஆம் ஆண்டளவில் சிறிலங்காவைப் பன்னாட்டளவில் கடன்பெறத் தகுதியாக்குதலே இந்த 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான EFF இன் நோக்கமென பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) சிறிலங்காவிற்கான நடவடிக்கைகட்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.மின்சார மானியங்களை நிறுத்தல், வரியை இரட்டிப்பாக்கல், தொலைத்தொடர்புச் சட்டம் (Telecommunication Act) மற்றும் மின்சாரச் சட்டம் (Electricity Act) ஆகியவற்றிற் திருத்தங்களை மேற்கொள்ளல், ஓய்வூதிய நிறுத்தம் மற்றும் குறைப்பு என இன்னும் வெளிப்படையாக நடைமுறைக்கு வராத பலவற்றை நடைமுறைப்படுத்துவதாக IMF இற்கு ஒப்புதலளித்தே வெறும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியின் ஒரு பகுதியைச் சிறிலங்கா பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அனுரவே நிறைவேற்ற வேண்டியிருக்கும். உண்மையில், பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து நாடுகள் கடன்பெற வேண்டுமாயின், கடன்கோரும் நாடுகளானவை தாம் அத்தகைய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகப் படிப்படியான பல கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். கல்வி, மருத்துவம், நீர்வழங்கல் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாகத் தனியார்மயப்படுத்துமாறும், மக்கட்கான மானியங்களையும் செலவுகளையும் குறைக்குமாறுமே தம்மிடம் கடன்கோரி வரும் நாடுகளைப் பன்னாட்டு நாணய நிதியமானது (IMF) முதற்கட்டமாக வற்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கட்டற்ற முதலாளித்துவ சந்தைப் பொருண்மிய நலன்கட்கு இசைவான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்றவற்றினை உள்வாங்கி, அதற்கேற்பக் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து, வெறும் நுகர்வுச் சந்தையாகவும், வளங்களைத் தங்குதடையின்றிச் சுரண்டவிடும் வளக்கொள்ளையர்களின் அடிவருடிகளாகவும் முதலாளித்துவ உற்பத்திக்கான மலிவான தொழிலாளர் சந்தையாகவும் (Cheap Labour Market) இருக்க உடன்படும் குறைந்த நடுத்தர வருவாயுள்ள நாடுகட்கே பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன கடன்களை வழங்குகின்றன. IMF வேண்டி நிற்கும் இத்தகைய கட்டமைப்பு மாற்றங்களினால் அதிகரிக்கும் வரிச்சுமையாலும், வாழ்க்கைச் சுமையாலும் இவ்வாறு கடன்பெறும் நாடுகளிலுள்ள மக்கள் சகிப்பின் எல்லையைக் கடந்து தெருவிற்கு வந்து போராடுவார்கள். மக்களின் வெறுப்புணர்வாலும், ஒத்துழையாமையாலும், போராட்டங்களாலும் நாடு இயங்க முடியாத நிலை உருவாகும். இதனால், IMF இனால் வழங்கப்படும் கடன்களையும் அதற்கான வட்டியையும் மீளப்பெறுவதில் IMF இற்குப் பாரிய சிக்கல்கள் உருவாக்கும் என்பதை IMFஆனது பட்டறிந்து வைத்திருக்கிறது. இப்படியாக IMF இற்குக் கசப்பான படிப்பினைகள் இந்தோனேசியா, சிம்பாவே, கிரீஸ், உக்ரேன் போன்ற பல நாடுகளில் வரலாற்றில் நிகழ்ந்தேறியிருந்தாலும், அண்மைய படிப்பினையாக ஆர்ஜென்ரீனாவில் நடந்தேறியவை, நடந்தேறுகின்றவை அமைகின்றன.கடன்களைச் செலுத்தும் ஆற்றல்களைத்தான் இழந்துவிட்டதாகவும், பொருண்மிய அடிப்படையில் முழுமையாக முடங்கிவிட்டதாகவும் உலகிற்குத் தனது வங்குரோத்துநிலையை (Bankruptcy) அறிவித்த ஆர்ஜென்ரீனாவானது 2018 ஆம் ஆண்டில் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெற்றுக்கொண்டது. தொடக்கத்தில் நாடு பொருண்மிய நெருக்கடியிலிருந்து மீளுவதாகத் தோற்றமளித்தாலும் (ரணிலின் கடந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் போல) நாளடைவில் ஆர்ஜென்ரீனாவானது தாம் வாழவியலாத நாடாக மாறிவிட்டதை அந்நாட்டு மக்கள் உணரலாயினர். சுமக்க முடியாத வாழ்வியற் சிக்கல்களை மக்கள் சுமக்கத் தலைப்பட்டனர்; சகிப்பின் எல்லையை மக்கள் கடந்தனர்; பணவீக்கம் பருத்தது; மக்கட்கு அரசு செய்த செலவுகளும், வழங்கிய மானியங்களும் மிக மிகக் குறைக்கப்பட்டது; வரிச்சுமை ஆர்முடுகியது. இதனால் மக்கள் தெருவிற்கு வந்தனர்; போராட்டங்களில் ஈடுபட்டனர்; எங்கும் கூச்சல்களும் குழப்பங்களும் ஆர்ஜென்ரீனாவெங்கும் நீடிக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள் தாம் இந்த IMF கடனால் ஆர்ஜென்ரீனா மீளும் என்பதிலோ அல்லது தாம் வழங்கிய கடனை ஆர்ஜென்ரீனா மீளச் செலுத்தும் என்பதிலோ நம்பிக்கையற்றவராக இருப்பதை வெளிப்படுத்துமாறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.எனவே, ஆர்ஜென்ரீனாவிலிருந்து பெற்ற அண்மைக்காலப் பட்டறிவின் அடிப்படையில் சிறிலங்காவிலும் அத்தகைய போராட்டங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உறுதியாக உண்டு என்று மேற்குலகத் தூதரகங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. தமக்குவப்பான ரணிலின் ஆட்சி தொடர்ந்தால், வாழ்க்கைச் சுமையால் வதையுறப்போகும் மக்களின் வெறுப்புணர்வுகள் மேலிட்டு வெடிக்கும் அத்தகைய போராட்டங்களை ஜே.வி.பி மற்றும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த முன்னணி சோசலிசக் கட்சி போன்ற அமைப்புகள் மக்களைத் திரட்டி முன்னெடுப்பார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் மேற்குலகானது, ஜே.வி.பி போன்ற தரப்புகட்கு ஆட்சிக் கட்டிலில் ஏறுவதில் இருக்கும் தீரா வேட்கையைப் பயன்படுத்தி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட்டால், அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது அவர்களை வைத்தே சிறிலங்காவானது மேற்குலகின் மூலதனச் சந்தையில் முழுதாகத் தங்கியிருக்குமாறான கட்டமைப்பு மாற்றங்களை நிகழ்த்தினால் (ஏற்கனவே, அதற்கான ஒப்புதல்கள் ஜே.வி.பி இனால் வழங்கப்பட்டு விட்டன) வெளியில் போராட்டங்களும் கூச்சல்களும் குழப்பங்களும் ஏற்படாது என்ற முடிவிற்கு வந்து விட்டது.இதன் தொடர்ச்சியாக, “அரகலய” போராட்டத்தினை முன்னெடுப்பதில் மேற்குலகிற்குப் பயன்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியானது (FSP) ஆட்சிக்கு வரும் அளவிற்குக் கட்டமைப்பு வலு இல்லாமல் இருப்பதால், ஒட்டுமொத்த “அரகலய” எழுச்சியும் (so-called) JVP இனுடைய வெற்றி என்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துமாறான பரப்புரைகட்கு மேற்குலகின் தூதரகங்கள் துணைநின்றன. அதனால், நாட்டில் தொடருகின்ற பொருண்மியச் சிக்கல்களைத் தீர்க்க ஒரு புதிய வரவாக, ஒளிரும் விண்மீனாக, JVP முதன்மைப்படுத்தப்பட்டது. மேற்குலகத் தூதரக அதிகாரிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாதிருந்த JVP இனரை தாம் அழைத்துச் சந்திக்காமல், JVP இன் தலைமை அலுவலகம் சென்று சந்திப்புகளை நடத்தி JVP இன் வருகை மீது மக்கள் நம்பிக்கைகொள்ளுமாறு ஊடகவெளிச்சம் பாய்ச்சப்பட்டது.  கனடா, இலண்டன் என JVP இன் உயர்மட்டக் குழு பயணம் செய்தது. JVP இனது வருகையானது உறுதிப்படுத்தப்பட்டதொன்று என்பது போல ஊடகங்களும் கருத்துக்கணிப்பு நடுவங்களும் பரப்புரை செய்தன.IMF இன் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரி பீட்டர் பிறீவன் தலைமையிலான உயர்மட்டக் குழுவானது 2024.03.14 அன்று கொழும்பிலுள்ள Sangri La விடுதியில் விஜித கேரத், பேராசிரியர் அணில் ஜெயந்த, பேராசிரியர் சீத பண்டார, முனைவர் கர்ச சூரியப்பெரும மற்றும் கந்துன்நெத்தி ஆகியோர் அடங்கிய‌ JVP இன் உயர்மட்டக் குழுவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பில் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) கடன்பெறுவதற்கான முன்னீடுகளாக (நிபந்தனைகளாக) ரணில் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் மறுப்பின்றி JVP ஆட்சிக்கு வர நேர்ந்தால் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அத்தகையை வாக்குறுதிகளை வழங்குமாறும் ஜே.வி.பி யிடம் கேட்கப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்காக எத்தகைய சொல்லத்தரமற்ற செயல்களிலும் ஈடுபட அணியமாகவிருக்கும் ஜே.வி.பியானது உடன்வந்து அத்தகைய அத்தனை உறுதிமொழிகளையும் வழங்கியது.  எனினும், JVP போன்ற இடதுசாரிய அமைப்பை மேற்குலக நாடுகள் எங்ஙனம் நம்புகின்றன எப்படி ஏற்றுக் கொண்டன எப்படி இணைந்து பயணிக்க அணியமாகவிருக்கின்றன அது வாய்ப்பில்லாத விடயமாயிற்றே உலகவங்கி, IMF போன்ற நிதி அமைப்புகள் கடன்வழங்கும் போது கடன்கோரும் நாடானது பொதுவுடைமைக் கொள்கைகட்கு எதிரானதாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தானே கடன் வழங்கிப் பழக்கப்பட்டவர்கள் உலக வங்கி நிறுவப்பட்டு சிறிது காலமேயாகியிருந்த 1947 ஆம் ஆண்டு பிரான்ஸ் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கியிடம் கடனாகக் கேட்டபோது, அப்போதைய பிரான்ஸ் அரசாங்கத்தில் பிரான்ஸ் பொதுவுடைமைக் கட்சியும் கூட்டணிக் கட்சியாக இருப்பதைக் காரணங்காட்டிப் பிரான்சிற்குக் கடன் மறுக்கப்பட்டதோடு, கூட்டணியிலிருந்து பொதுவுடைமைக் கட்சி வெளியேற்றப்பட்ட பின்பே உலக வங்கி பிரான்சிற்குக் கடன் வழங்கியது. இப்படியாக, இடதுசாரிய பொதுவுடைமைக் கொள்கைகட்கு எதிரான ஆட்சியுள்ள நாடுகட்கு மட்டுமே கடன்வழங்க முன்வரும் IMF போன்ற நிதிமூலதன அமைப்புகள் JVP இன் ஆட்சியை எப்படி வரவேற்கின்றன JVP ஆட்சியில் எப்படிக் கடன்வழங்கலைத் தொடர முன்வருகின்றன அப்படியென்றால், ஜே.வி.பியினர் இடதுசாரியப் பொதுவுடைமைக் கட்சியினர் இல்லையாஉண்மையில் JVP இடதுசாரிக் கட்சியா இல்லையாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான நா.சண்முகதாசனைத் தலைமையேற்று அவருடன் நெருங்கிப் பழகி, கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்திய ரோகண விஜயவீர நா.சண்முகதாசன் மூலமாக வடகொரியா, சீனா, இந்தோனேசியா என உலகலாவிய புரட்சிகரத் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு உட்கட்சி விவாதங்கள் ஏதுமின்றி தமிழரான நா.சண்முகதாசனிற்கு எதிராகத் தனக்கென ஒரு குழுவை உருவாக்கியதோடு, ரொட்ஸ்கிய எதிர்ப்புரட்சிக் கருத்தியலிற்கும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பெயர்போன கெனமனுடன் கூட்டுச் சேர்ந்து 1966 இல் கெனமன் தலைமையில் பேரினவாத நோக்குடன் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியதோடு நா.சண்முகதாசன் தலைமைதாங்கி நடத்திய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினுடைய‌ (பீஜிங் பிரிவு) வளங்களைப் பயன்படுத்தி அந்த ஊர்வலத்திற்குத் திருட்டுத்தனமாகத் துண்டறிக்கை அச்சிட்டு, கட்சியின் ஒழுக்கநெறிகளை மீறி இரண்டகமிழைத்ததால் ரோகண விஜயவீரவை கட்சியிலிருந்து நா.சண்முகதாசன் அவர்களால் இடைநீக்கப்பட்டார். இவ்வாறாக, சிங்கள பேரினவாத சிந்தனை என்பது ரோகண விஜயவீரவிடம் 1960 களிலேயே வெளிப்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளரை முன்னணிப் போர்ப்படையாகக் கருதி மலையக மக்களின் தொழிலுரிமைப் போராட்டங்களில் கூடிய அக்கறை செலுத்திப் போராடிய நா.சண்முகதாசனிற்கு இனவாதச் சாயம் பூசுவதிலும் முனைப்புடன் இருந்த ரோகண விஜயவீர 1965 யில் ஜே.வி.பியினை நிறுவினார்.   1971 இல் ஜே.வி.யினர் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளவிருந்த முதலாவது புரட்சியும் வர்க்கபோராட்டமாக இல்லாமல் சாதியக் காழ்ப்புப் போராட்டமாகவே திரிபிற்கு உள்ளாகியிருந்தது. பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றும் அரச அதிகாரத்தைப் புரட்சிகரப் போராட்டத்தினாற் கைப்பற்றினால் மட்டுமே புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்த முடியுமென்றும் முழங்கி வந்த ரோகண விஜேயவீர 1982 இல் தேர்தற் பாதையில் பயணித்துத் தாமும் பாராளுமன்றத்தில் ஒரு பன்றியாக அமர முயற்சி செய்து அதிலும் தோல்வி கண்டார்.பின்னர் 1987- 1989 காலப்பகுதியில் ஜே.வி.யினரது இரண்டாவது எழுச்சியென்பது தாம் 1970 களில் மேற்கொள்ளவிருந்ததாகக் கூறிக்கொண்ட வர்க்கப் போராட்டத்தினைக் கைவிட்டு முற்றுமுழுதான தீவிர சிங்கள தேசியக் கட்சியாக ஜே.வி.பி தன்னை மாற்றிக் கொண்டது. தமிழர்களின் தாயகநிலத்தைக் கூறுபோடுவதன் மூலம் தமிழர்தேசத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக வடக்கு – கிழக்கைப் பிரிக்க வழக்குத் தாக்கல் செய்தமை, புலிகளுடனான அமைதிப்பேச்சுக்களைத் தொடராமல் முழு அளவிளான போர் தொடங்கப்படும் என்று உறுதியளிப்பவர்களுக்கே தமது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கு வாழ்த்துத் தெரிவிக்க அமெரிக்கத் தூதரகம் சென்றமை (தமிழர்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியத்துடனும் உறவாடுவோம் என்ற கொள்கையையுடைய அரிய வகை இடதுசாரிகள்), தமிழினவழிப்புப் போரின் பரப்புரைப் படையாகச் செயற்பட்டமை, மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கக் கைக்கூலிகள் என்று சிங்கள மக்களிடத்தில் கருத்தேற்றம் செய்தமை, இலங்கைத்தீவில் இனச்சிக்கல் என்ற ஒன்றிருப்பதாக எந்நிலைவரினும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்தல் என ஜே.வி.பியின் கடந்தகால வெறித்தனமான சிங்கள பேரினவாத நிலைப்பாட்டை பழையதெனவும் காலம் மாறிவிட்டது என்றும் தமிழர்கள் தப்புக் கணக்குப்போட்டால், வரலாறு மீளவும் பழைய பாடங்களைத் தமிழர்கட்குப் புகட்டும் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.ரோகண விஜயவீர, உபதிஸ்ச கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற ஜே.வி.யின் தலைவர்கள் கொல்லப்பட உயிருடன் எஞ்சிய ஒரே தலைவரான சோமவன்ச அமரசிங்க என்பவர் இந்திய உளவுத்துறையான “ரோ” வினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரான்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்திய எதிர்ப்புப் பேசிய சோமவன்ச இந்திய உளவுத்துறையுடன் சல்லாபித்து தனது உயிரைக் காப்பாற்றி ஜே.வி.யின் நாலாவது தலைவராகத் தலைமையேற்றார். பின் சந்திரிக்காவுடன் சல்லாபித்து, அவருடன் கூட்டணி சேர்ந்து 3 அமைச்சர்களுடன் 39 நாடாளுமன்ற இருக்கைகளைப் பிடித்துக்கொண்டனர். சுனாமி ஆழிப்பேரலைப் பேரிடரில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீண்டெழுவதற்காக மாந்தநேயக் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்ட சுனாமி மனிதாபிமான செயற்பாட்டு வரைபிற்கெதிராக‌ப் பேரினவெறிப் பரப்புரை செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவர இடமளிக்காமற் தடுத்தது ஜே.வி.பியினரே என்பதைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். “சிங்கள – தமிழ் கலைக்கூடல்” என்ற பெயரில் 2003 ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் ஒக்டோபர் மாத இறுதியில் 2 நாள்கள் நடந்த இன நல்லிணக்க ஒன்றுகூடலின் போது நிகழ்விடத்திற்குள் புகுந்து கூடியிருந்தவர்களைத் தாக்கிய இருநூறிற்கும் கூடுதலான சிங்கள பேரினவெறிக் காடையர்களிற்கு சோமவன்ச வழிவந்த ஜே.வி.யினரே தலைமை தாங்கினர் என்பதையும் நாம் இவ்விடம் நினைவூட்ட விழைகின்றோம். மேலும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) என்ற பெயரில் இயங்கிய ஜே.வி.யின் துணை அமைப்பானது 2005 இனை குடியேற்றவாத எதிர்ப்பாண்டாக அறிவித்ததோடு “பௌத்த இராட்சியத்தை அழித்துவிட்டு கிறித்தவ தமிழீழத்தை நிறுவவே பன்னாட்டுச் சமூகம் வேலை செய்கின்றது” என்று மேடைகளில் முழங்கிச் சிங்கள இனவாதத்தை பீறிட்டெழச் செய்தனர். “கிறித்தவ தமிழீழம்” போன்ற அப்பட்டமான இனவெறிக் கூச்சலானது இந்தியாவைப் பிடித்தாட்டும் பாசிசப் பேயான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்துவ பாசிச அமைப்புகளின் கூச்சல்களை விடவும் இழிவாக இருந்தது.கொள்கை நிலைப்பாடுகளில் தகிடுதத்தியாகவும் சிங்கள இனவெறியில் ஊறியவராகவும் ரோகண விஜேயவீர இருந்தாலும் தன்னுயிரை ஈகம் செய்வதில் பின்நிற்கும் கோழையாக அவர் இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், சோமவன்ச அமரசிங்க தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எத்தகைய சொல்லத்தரம‌ற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடிய பேடி என்பதை நாம் இங்கு கோடிட்டுக் கூற வேண்டியிருக்கிறது. இந்த சோமவன்சவின் வழிநடத்தலில் மீளுயிர் பெற்ற ஜே.வி.பி யினரே இன்றைய ஜே.வி.பி யினர் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். சோமவன்ச அமரசிங்கவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அவரின் வழியில் பயணத்தை மாற்றிக்கொண்ட ஒருவரே இன்றைய குடியரசுத் தலைவரான அனுரகுமார திசாநாயக்க என்பதை நாம் ஐயந்திரிபறத் தெரிந்துகொள்ள‌ வேண்டும். வெவ்வேறு வரலாற்றுக் கட்டத்தில் மார்க்சியத்தை மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்போர் வளர்த்தெடுத்து வந்தனர். எனவே, இந்த ஐந்து மார்க்சிய மூலவர்களையும் அவர்களது சிந்தைகளையும் ஏற்றுக்கொள்ளாத எவரும் மார்க்சியர்களே அல்ல.உண்மையில், அனுரகுமார தலைமையிலான இன்றைய ஜே.வி.யினர் இடதுசாரிகளும் அல்ல; மார்க்சியர்களும் அல்ல; பொதுவுடைமைவாதிகளும் அல்ல. அவர்கள் மார்க்சிய வேடமணிந்து ஊரை ஏமாற்றும் வேடதாரிகள்.இயற்பியலறிவைச் (Physics) சமூகத்தைப் புரிந்துகொள்ளும் படியாக விரிவாக்கிச் சமூக அறிவியலுக்கு வலுவான அடித்தளமிட்ட மார்க்சிய அறிவியலையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியற் கண்ணோட்டத்தில் மாந்தகுல வரலாற்றைப் புரிந்துகொண்ட மார்க்சினதும் ஏங்கல்சினதும் கருத்துகளையும் உள்வாங்கியதோடு, மார்க்சியப் பொருளியலைச் சரிவரப் புரிந்துகொண்டு அதனை வெறுமனே வர்க்கப் பார்வைக்குள் மட்டுமே குறுக்கிவிடாது சமூக அறிவியலை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்றவர்கள் லெனின், ஸ்ராலின் மற்றும் மாவோ சேதுங் ஆகியோர்களே. தேசங்களின் தன்னாட்சியுரிமை (Self-determination) பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்த லெனினும் அதனை மேலும் திறம்பட வரையறுத்துத் தேசங்கள் தேச அரசமைக்கும் (Nation State) வரலாற்றின் போக்கினைத் தெளிவுற மனங்கொண்ட ஸ்ராலினும், ஸ்ராலினின் மறைவின் பின்னர் திரிபுவாதிகளிடமிருந்து மார்க்சிய அரசியலைக் காப்பாற்றிய மாவோவும் இன்று மார்க்சியத்தின் பெயரால் எதிர்ப்புரட்சிகரக் கருத்தியல்களை விதைக்கும் JVP போன்ற‌ கருத்தியல் அரம்பர்களினால் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.எனவே, இந்த மார்க்சிய மூலவர்களில் ஒருவரையேனும் மறுத்து மார்க்சியம் பேசுபவர்கள் மார்க்சியரே அல்ல என்றும் அவர்கள் மார்க்சின் பெயரால் மார்க்சியத்தை அழிக்கும் திரிபுவாத அணியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நாம் தெரிந்து தெளிய வேண்டும்.  ராஜினி திரணகமவை நெஞ்சில் சுமந்து திரிபவரும் தன்னை முற்போக்காளராக அடையாளங்காட்டுபவருமான‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் 1914 இல் லெனின் கூறியவை இன்றைய காலத்திற்குப் பொருந்தாதவை என்று லெனினை மறுத்துப் பேசித் தான் மார்க்சின் பெயரால் சுற்றுத்திரியும் மார்க்சியத்திற்கு எதிரான திரிபுவாதப் புரட்டன் என அம்பலப்பட்டு நிற்கின்றார். நவ காலனியச் சமூக அமைப்பில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஒரு தேசமானது தேச அரசமைக்கும் வரலாற்றின்வழியே தான் வரலாற்றில் முன்னகர இயலுமென்று கூறுவதே மார்க்சியம். அப்படியெனின், தமிழீழதேசம் தமிழீழதேச அரசமைக்கும் வரலாற்றுப் பயணத்திற் புரட்சிகரமாகப் பங்கெடுக்க வேண்டியதே மார்க்சியர்களின் கடமை என்பதை ஐயந்திரிபற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். JVP போன்ற ஒரே நாட்டு முழக்கமிடுபவர்கள் மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் புரட்டர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பின்னவீனத்துவம், நவ மார்க்சியம் போன்ற போர்வைகளில் நடமாடும் இத்தகைய பல்கலைக்கழக விரிவுரையார்கள் விழலுரையாளர்களே என்பதுடன் அவர்கள் மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தையும் தமிழ்த்தேசியம் போன்ற புரட்சிகரக் கருத்தியல்களையும் அழித்தொழிப்பதற்காக அலைந்து திரியும் அழுக்கர்கள் என்பதையும் மக்கள் மனங்கொள்ள வேண்டும். அனுரகுமாரவும் அவரது கும்பலும் அத்தகையோரே என்பதிலும் தமிழர்கள் தெளிவுபெற வேண்டும்.இவர்கள் மார்க்சியர்களா இல்லையா என்ற குழப்பம் இன்னமும் நீடித்தால், கருத்தியற்தெளிவு பெறாத எம்மக்கட்குப் புரியும் படி நாம் இன்னமும் எளிதாகத் தெளிவுபடுத்த‌ விழைகிறோம். அதாவது தமிழ்த்தேசியத்தின் பேரால் இந்துத்துவ அரம்பர்களின் அடியாளாகச் சுற்றுத் திரியும் இந்தியாவின் அடிவருடிகளான மறவன்புலவு சச்சிதானந்தன் போன்ற தமிழர்களைக் குழுப்பிரித்துத் தமிழ்த்தேசிய இனத்தை வலுக்குன்றச் செய்வோர் எப்படித் தமிழ்த்தேசியர்கள் அல்லவோ; இன்னும் சொல்லப்போனால் புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் இந்தியாவின் வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இத்தகைய வகையறாக்கள் எங்ஙனம் தமிழ்த்தேசியத்தின் பேரில் சுற்றித்திரிகிறார்களோ அவ்வாறே தான் மார்க்சியத்தின் பேரில் JVP போன்ற மார்க்சியத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சிகர அரம்பர்கள் ஆடித்திரிகிறார்கள்.ஜே.வி.பியினரின் இந்தியப் பயணம்இவ்வாறாக, போலி மார்க்சியர்களும், ஆட்சியில் அமருவதற்காக சொல்லத் தரமற்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அணியமாக இருப்பவர்களும், மார்க்சின் பேரில் எதிர்ப்புரட்சிக் கருத்தியல்களைப் பரப்பி மார்க்சையும் மார்க்சிச மூலவர்களையும் பலமுறை கொடூரமாகக் கொன்றவர்களுமான‌ ஜே.வி.பியினரை ஆட்சிக்குக் கொண்டு வருவதென மேற்குலகானது சென்ற ஆண்டே முடிவுசெய்து விட்டது. இந்தப் பின்னணியிலேயே, வேறுவழியின்றி, வரலாற்றில் முதன் முறையாக JVPயினரின் பேராளர் முழுவானது (delegation) 5 நாள் சுற்றுப் பயணத்திற்கு டெல்கியினால் அழைக்கப்பட்டது. புகழ்வாய்ந்த தமது 5 அரசியல் வகுப்புகளில் முதன்மையான இடம் வகித்திருந்த இந்திய விரிவாக்கம் (Indian Expansionism) பற்றிய வகுப்புகளின் மூலம் இந்தியாவை எதிர்ப்பதாகத் தோற்றங்காட்டிய மக்கள் விடுதலை முன்னணியானது (JVP) தனது இரண்டாவது கிளர்ச்சியை இந்திய எதிர்ப்புவாதத்திலிருந்தே வெளிக்கிளம்ப வைத்தமை யாவரும் அறிந்ததே. அப்படியிருக்க, ஜே.வி.பி தொடங்கப்பட்டுச் சற்றொப்ப 60 ஆண்டுகளாகும் நிலையில் வரலாற்றில் முதன்முறையாக டெல்கிக்கு அழைக்கப்பட்டு இந்தியாவின் வெளி அலுவல்கள் அமைச்சரான ஜெய்சங்கருடனும், இந்திய அதிகார வர்க்கத்தினருடனும் சந்திப்புகள் நடைபெற்றன. அத்துடன் ஒருபடி மேற்சென்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவாலுடனும் அனுரகுமார தலைமையிலான குழு சந்திப்பை மேற்கொண்டது. அத்துடன் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தாய்நிலமான குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட JVP யினர் அங்குள்ள முதலீட்டாளர்களுடன் கைகுலுக்கும் நிகழ்வுகளானவை ஜே.வி.பியினரின் 5 நாள் இந்தியப் பயணத்தில் நடந்தேறின. ஆட்சியதிகாரத்தை அடைவதற்கு எந்த நிலைக்கும் போகக் கூடிய ஜே.வி.யினரின் அன்றைய இந்திய எதிர்ப்பு முழக்கங்களில் கூட உண்மையில்லை என்பதை இந்தியா நன்குணரும். அத்துடன், சிறிலங்காவானது பொருளியற் சிக்கலிற்குள் மீண்டெழ இயலாதவாறு சிக்குண்டிருந்தபோது 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இறைத்துத் தான் போட்டுக் கொண்ட மேலாண்மை அடித்தளத்திலிருந்து இனிவரும் எந்த சிறிலங்காவின் ஆட்சியாளர்களாலும் காலெடுக்க முடியாது என்று உறுதியாக நம்பும் இந்தியாவானது வழமைக்கு மாறான முதன்மையை ஜே.வி.பியின் இந்த 5 நாள் இந்தியப் பயணத்திற்கு வழங்கியிருந்தது. ஆட்சியதிகாரத்தை அடையவும் தன்முனைப்பைக் காட்டவும் வாய்ப்புள்ள சொல்லத்தரமற்ற வழிகளைக் கூட ஜே.வி.யினர் பயன்படுத்துவர் என்பதை வரலாற்றில் நடந்தேறிய நிகழ்வுகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.இன்றைய நிலைவரம்எது எப்படியோ, சோமவன்ச அமரசிங்க என்ற பேடியின் வழியில் புதிய பயணத்தைத் தொடங்கிய ஜே.வி.யின் தலைவரும் சோமவன்சவின் வழி நின்ற திரிபுவாதியுமான அனுரகுமார திசாநாயக்க குடியரசுத் தலைவராகிவிட்டார். இன்றைய நிலைவரப்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைச் சேர்த்து 83 பில்லியன் அமெரிக்க டொலரிற்கு மேற்பட்ட கடனை சிறிலங்கா செலுத்த வேண்டியிருகின்றது. கடன்மறுசீரமைப்பு உடன்படிக்கைகட்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடன் செலுத்தலை அனுர ஆட்சியில் சிறிலங்கா மீண்டும் தொடர வேண்டியுள்ளது. அதில் மிகக் கூடுதலான வட்டிவீதத்தில் ISB மூலமாகப் பெற்ற 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன்களும் அடங்குகின்றது என்பதையும் அதற்கு வட்டி செலுத்தியே சிறிலங்காவின் மக்கள் அனுரகுமாரவின் ஆட்சியிற் பாடாய்ப்படப் போகின்றார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 40 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய உள்நாட்டுக் கடன்களால் ஓய்வூதியம் மற்றும் ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை நிதியம் என்பன பாதிப்பிற்குள்ளாகப் போகின்றது. தற்போதைய நிலைவரப்படி கடனிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது (debt to GDP) அண்ணளவாக 100.56% ஆகிவிட்டது.இப்படியாகச் சிறிலங்கா என்ற ஓட்டைக் கப்பலிற்கு ஓட்டியாக அனுரகுமார எனும் அலப்பறை வந்திருக்கிறார். கட்டமைப்பு மாற்றத்தைச் செய்யப்போவதாகக் கதையளந்தவர் IMF வேண்டுகின்ற கட்டமைப்பு மாற்றத்தை, அதாவது நம்பி வாக்களித்த மக்கட்கு ஏமாற்றத்தைத்தான் அனுரகுமார செய்யப்போகின்றார். அவரால் ரணிலிற்கும் மேற்குலகிற்கும் உவப்பாகவிருந்த மத்திய வங்கியின் ஆளுநரைக் கூட மாற்ற இயலவில்லை. ரணிலால் நியமிக்கப்பட்ட‌ நிதி அமைச்சின் செயலரைக் கூட அனுரகுமாரவால் மாற்ற முடியவில்லை. நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கிறதென்றும் அதனைத் தீர்த்துச் சிங்கள பௌத்த நாட்டைக் காப்பாற்ற‌ கோத்தாபய தான் சரியான தெரிவு என்றும் நினைத்துக் கோத்தாபயவை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதே சிங்கள மக்கள் தான் தற்போது தாம் எதிர்கொள்ளும் பொருண்மியச் சிக்கலைத் தீர்க்க அனுரகுமாரவே சரியான தெரிவு என நினைத்துத் தேர்வு செய்திருக்கிறார்கள். அந்தத் தெரிவு போலவே இந்தத் தெரிவும் சிங்கள மக்கட்கு ஏமாற்றத்தையே அளிக்கப்போகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவதற்காகப் பரப்புரை நோக்கிலேயே அனுரகுமார நகர்வதாகத் தெரிகிறது. வரிக்குறைப்புத் தொடர்பான அவரது அறிவிப்பானது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரைக்குமே நடைமுறையில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல.அதேவேளை, தம‌து கோயாபல்ஸ் பரப்புரையை ஜே.வி.யினர் ஆரம்பித்துள்ளனர். ரணிலிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொய்புனைவுகள் சமூக வலைத்தளங்களிற் பரப்பப்பட்டன. அதனை மறுத்த சிறிலங்கா பொலீசார், 163 பொலீசாரும் சிறப்பு அதிரடிப் படையும் ரணிலிற்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும், பாதுகாப்பு நீக்கப்பட்டது/ குறைக்கப்பட்டது எனப் பரவிய செய்திகள் பொய்யானவை என அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதாகப் பரவிய செய்தியிலும் உண்மையில்லை; தற்போதைய ஆட்சிக்கு அஞ்சி நாட்டைவிட்டுத் தப்பியோடுவோரைத் தடுப்பதற்காக ஒரு பட்டியல் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் காத்திருப்பதாகப் பரவிய செய்திகளிலும் உண்மையில்லை; முன்னாள் வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அம்மையார் நாட்டை விட்டுத் தப்பியோட எடுத்த முயற்சி தடுக்கப்பட்டதாகப் பரவிய செய்தியிலும் உண்மையில்லை; ஊழல் செய்தோர் தொடர்பான கோப்புகளுடன் தேர்தல் பரப்புரை நேரங்களில் அலைந்து திரிவதாகக் கூறிய அனுர அத்தகைய கோப்புகள் குறித்து வாயே திறப்பதாகவில்லை; உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல் தொடர்பான உசாவல்கள் குறித்து அனுரகுமார மூச்சுவிடுவதாகக் கூடத் தெரியவில்லை; கோத்தாபயவின் விருப்பின்படி அமைந்த புலனாய்வு நிறுவனங்கள் (Intelligence Establishments) ஒரு சில பதவி மாற்றங்கள் கூட நடைபெறாமல் அப்படியே இயங்குகின்றன‌; ராஜபக்ச குடும்பத்தினைக் கூண்டில் அடைக்கப்போவதாகக் கூறிய கதைகள் காற்றோடு போய்விட்டன‌. எருமை வாங்கும் முன்பே நெய்யிற்கு விலை கூறும் ஜே.வி.பியினர் இப்போது எருமையைக் கையில் வைத்துக்கொண்டு பாலிற்கே விலை கூற மறுக்கின்றார்கள். பொய்யையும் வஞ்சகத்தையும் மட்டுமே தமது அரசியற் பண்பாடாகக் கொண்ட சோமவன்ச அமரசிங்க வழியில் வந்த இன்றைய ஜே.வி.பி அரம்பர்கள் முழுமையாக அம்பலப்பட்டுப் போகும் காலம் தொலைவில் இல்லை என்பதை நாம் அடித்துக் கூறுகின்றோம்.எம் தமிழ்மக்களேஎம் தமிழ்மக்களே ஏன் இந்தத் தடுமாற்றம் சந்திரிக்கா வந்தபோதும் இப்படியொரு தடுமாற்றத்திற்கு ஆளானீர்களே வரலாற்றிலிருந்து அடிப்படையான பாடங்களைக் கூட இனவழிப்பின் பின்பும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா சிறிலங்காவின் ஆட்சிக் கட்டிலில் கௌதம புத்தரே அமர்ந்தாலும் அவர் மகாவம்சம் சித்தரிக்கின்ற துட்டகெமுனுவாகவே ஆட்சிசெய்வார் என்பதைக் கூட நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா அனுரகுமார போன்ற ஒரு புரட்டன் இன்னும் சில மாதங்களில் உங்களிடம் அம்பலப்பட்டு விடுவார். இளையோரே உங்கட்கு ஒன்று தெரியுமா அரசியற் பண்பாடு பற்றிப் பேசும் ஜே.வி.யினரின் சமூக நடத்தைகள் யாதென நீங்கள் அறிவீர்களா அவர்களின் மாணவர் அமைப்பான சோசலிச மாணவர் ஒன்றியக் (Socialist Students Union) கூடுகைகளானவை கஞ்சா போன்ற போதைப்பழக்கங்கட்கும் பாலியற் சீர்கேடுகட்கும் பேர் போனவை என்பதை நீங்கள் அறிவீர்களா ஜே.வி.பியினரில் பலர்  போதைப் பயன்பாடு தொடர்பான குருதிமாதிரி ஆய்வுகட்கு (intoxication test) உட்படுத்தப்பட்டால் அவர்களின் அரசியற் பண்பாட்டையும் சமூகப் பண்பாட்டையும் நீங்கள் நன்கு அறிந்துகொள்வீர்கள்.இப்போது தேசிய இனச்சிக்கல் என்பது இலங்கைத்தீவின் முதன்மைச் சிக்கல் அல்ல‌ என்றவாறு ஜே.வி.யினர் கதையளப்பதோடு “எல்லோரும் சிறிலங்கன்” என்ற அடிப்படையில் ஒன்றிணையுமாறு அவர்கள் அழைப்பது உண்மையில் எல்லோரையும் சிங்கள பௌத்தத்தை ஏற்று நடக்குமாறான அழைப்புத்தான் என்பதை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டு அலைந்த இன்றைய ஜே.வி.பியினர் இப்போது பேசுவது இனநல்லிணக்கமன்று; அது கட்டாய ஓர்மைப்படுத்தல் (Forced Assimilation). அவர்கள் ஏற்படுத்த முனையும் சிறிலங்கன் என்ற அடையாளஞ் சுமக்கும் பண்பாட்டு ஓர்மைப்படுத்தல் (Cultural Assimilation) என்பது பண்பாட்டு இனவழிப்பின் ஒரு வடிவமாகும் என்பதையும், அத்தகைய பண்பாட்டு இனவழிப்பென்பது இனவழிப்பின் தொடர்ச்சியே என்பதையும் எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இலங்கைத்தீவின் முதன்மை முரண்பாடான தமிழர்களின் தேசிய இனச்சிக்கல் என்பது தீர்க்கப்படாதபோது, அது எப்படி முரண்பாடாகவே இல்லாமல் போனது எம் தமிழர்களே உங்கட்கு இன்னும் புரியவில்லையா தமிழினவழிப்பைத் தான் ஜே.வி.பியினர் தேசிய இனச்சிக்கல்கட்கான தீர்வாகக் கொண்டிருந்தார்கள் என்பது உங்கட்கு இன்னும் புரியவில்லையா சிங்களதேசத்தின் ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு தமது மொழியுரிமையைக் கூட முறையாகப் பயன்படுத்தவியலாமல், தமது பகுதிகளிலே தமது ஆளுமையை நிலைநாட்டவியலாமல், தமது முன்னோர்களின் அறிவுமரபையும் பண்பாட்டு வளர்ச்சிகளையும் தொடர்ந்து பேண முடியாமல் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகச் சிறுத்துக்கொண்டே வரும் தமிழர்தேசமானது தனது அரசியற் கட்டுறுதியைப் பேணமுடியாமலும் தமிழ்த்தேசத்தின் வரலாற்று இருப்பைப் பேணவியலாமலும் சிதைந்தழிய வேண்டுமென்ற சூழ்ச்சியை மனங்கொண்ட இந்தச் சிங்கள வெறியர்கள் எமது தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசாமல் சிறிலங்கனாகப் பண்பாட்டு ஓர்மைப்படுத்தலிற்குள்ளாகி அழிந்துபோகுமாறு அழைக்கிறார்கள். தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை எம் மனத்தில் நிறுத்தி எமது தேசவிடுதலை நோக்கிய அடுத்த பாய்ச்சலிற்கு நாம் அணியமாக வேண்டாமாநன்றி- kaakam.com

Advertisement

Advertisement

Advertisement